கரோனா தடுப்பு நெறிமுறைகளை கண்காணிக்க 32 குழுக்கள் : நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தகவல்

By செய்திப்பிரிவு

பொதுமக்கள் அரசின் கரோனா தொற்று தடுப்பு வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றுவதை உறுதி செய்யவும், கண்காணிக்கவும் நாமக்கல் மாவட்டத்தில் 32 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன, என மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தெரிவித்தார்.

கரோனா தொற்று தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் பின்பற்றுவதை உறுதி செய்வது தொடர்பாக அமைக்கப்பட்ட கண்காணிப்பு குழுக்களுடனான ஆலோசனைக் கூட்டம் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தலைமை வகித்துப் பேசியதாவது:

அரசு அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள், தன்னார்வலர்கள் ஆகியோரது அர்ப்பணிப்பு பணிகளால் நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது. எனினும், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்கவில்லை என்றால் நோய்த்தொற்று பரவும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

பொதுமக்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவதை உறுதி செய்யவும், கண்காணிக்கவும் குறுவட்டத்திற்கு ஒரு குழுவீதம் 32 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்களில் வருவாய்த்துறை, காவல்துறை, வளர்ச்சித்துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் தினந்தோறும் தங்கள் கண்காணிப்புக்கு உட்பட்ட பகுதிகளில் வணிக வளாகங்கள், கடைவீதிகள், காய்கறி சந்தைகள் உள்ளிட்ட பொதுஇடங்களில் தனிமனித இடைவெளி கடைபிடிக்கப்படுகிறதா, பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து வருகிறார்களா என பார்வையிட வேண்டும்.

மீறுவோர் மீது அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கடைகளில் கிருமி நாசினிகள், கைகழுவும் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனவா என்று ஆய்வு செய்ய வேண்டும். வீடுகளை விட்டு பொதுமக்கள் வெளியில் வரும்போது முகக்கவசம் இன்றி வெளியே வர அனுமதிக்கக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சு.வடிவேல், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வி.ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE