கடலூர் மாவட்டத்தில் - களையிழந்த ஆடிப்பெருக்கு :

கரோனா ஊரடங்கால் கடலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு ஆடிப் பெருக்கு களையிழந்து காணப்பட்டது.

ஆண்டுதோறும் ஆடி மாதம் 18-ம் தேதி ஆடிப் பெருக்கு கொண்டாடப்படுவது வழக்கம். ஆடிப் பெருக்கு அன்று திருமணமாகாத பெண்கள் தங்களுக்கு நல்ல கணவர் அமைய வேண்டியும், சுமங்கலி பெண்கள் வாழ்வில் அனைத்து செல்வங்கள் பெற வேண்டியும் நீர்நிலைகளில் சிறப்பு பூஜை செய்து வழிபடுவார்கள். புதுமணத் தம்பதியினர் திருமண மாலையை நீர் நிலைகளில் விட்டு, தாலி மாற்றி கோர்த்து விட்டு படையல் செய்வதுண்டு.

கரோனா ஊரடங்கால் நேற்றைய ஆடிப் பெருக்கு நிகழ்வில் கடலூர் மாவட்ட நீர் நிலைகளில் குறைந்த அளவு மக்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

சிதம்பரம் வட்டம் வல்லம் படுகையில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் நேற்று காலை தொடங்கி மாலை வரையிலும் கூட்டம் குறைவாக இருந்தது. மிகக்குறைந்த அளவில் புதுமணத் தம்பதியினர் வந்து, படையிலிட்டு வழிபாட்டில் ஈடுபட்டனர். பின்னர் புதுமண தம்பதியினர் திருமண மாலையை கொள்ளிடம் ஆற்றில் விட்டனர்.பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் சமூக இடைவெளியை கடைப்பிடிக்குமாறு அறிவு றுத்தினர்.

இது போல வீராணம் ஏரி, கடலூர் தேவனாம்பட்டினம் கடல் பகுதி, கொள்ளிடம் ஆற்றின் கரையையோர கிராமங்கள் உள்ளிட்ட பல்வேறு நீர் நிலைகளில் குறைந்த அளவில் மக்கள் கூடி, பூஜை செய்து வழிபட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்