தடுப்பூசி முகாம் குளறுபடிகளை களைய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல் :

By செய்திப்பிரிவு

திருப்பூரில் தடுப்பூசி முகாம் நடத்துவதில் உள்ள குளறுபடிகளை களைய வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, மாநகராட்சி ஆணையர் கிராந்தி குமார் பாடிக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்கு ஒன்றியக் குழு உறுப்பினர் ஏ.சிகாமணி நேற்று அனுப்பிய கடிதத்தில், "கரோனா தொற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க, சுகாதாரத் துறை சார்பில் வாக்குச்சாவடி வாரியாக தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. நெருப்பெரிச்சல், ஜிஎன் கார்டன் பகுதியிலுள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தடுப்பூசி செலுத்துவதில் உள்ள குளறுபடிகளை சரி செய்ய வேண்டும்.

நெருப்பெரிச்சல் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உட்பட்ட 16 ,17 ,18, 19 ஆகிய வார்டுகளிலுள்ள மக்களுக்கு செலுத்த வேண்டிய 280 தடுப்பூசிகளை, கடந்த மாதம் 19, 31 ஆகிய தேதிகளில் தவறுதலாக குருவாயூரப்பன் நகர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உட்பட்ட போயம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் முகாம் நடத்தி செலுத்தியுள்ளனர். இதனால், நெருப்பெரிச்சல் மருத்துவமனைக்கு உட்பட்ட மக்கள் தடுப்பூசி செலுத்த முடியாமல் போனது.

கூலிபாளையம், சேடர்பாளையம், நெருப்பெரிச்சல், ஜி.என்.கார்டன், சமத்துவபுரம் ஆகிய பகுதிகளில் பெயரளவு ஓரிரு முகாம்கள் மட்டும் நடத்திவிட்டு, தடுப்பூசியை வேறு பகுதிக்கு மடைமாற்றம் செய்வதால், மேற்கண்ட பகுதியில் வசிப்பவர்களுக்கு தடுப்பூசி கிடைக்காத நிலைக்கு தள்ளப்படுகின்றனர். எனவே, முகாம் நடைபெறும் பட்டியல் தயாரிக்கப்படும்போது, அனைத்து பகுதி மக்களும் பயன்பெறும் வகையில் திட்டமிடும்படி கேட்டுக்கொள்கிறோம்.

நெருப்பெரிச்சல் வருவாய் கிராமத்துக்கு உட்பட்ட வெளியூர்களிலிருந்து, பணி நிமித்தமாக திருப்பூரில் வசிக்கும் வாக்காளர் அல்லாதவர்கள் மற்றும் 18 வயது பூர்த்தி அடைந்து வாக்காளர் அல்லாதவர்களுக்கு, சிறப்பு தடுப்பூசி முகாம்களை வார்டு வாரியாக நடத்த வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்