நாமக்கல் மாவட்ட கனரக வாகனங்கள் கட்டுமான தொழிற்பேட்டைக்கு தொழிற்கூடங்கள் வராததால் அப்பகுதி முழுவதும் முட்செடிகள் முளைத்து புதர்மண்டி காட்சியளிக்கிறது.
சரக்கு வாகனப் போக்குவரத்தில் முன்னிலை வகிக்கும் நாமக்கல் மாவட்டம், லாரி பாடி கட்டும் தொழிலிலும் இந்திய அளவில் முன்னிலை வகிக்கிறது. நாமக்கல் நகரம் அதன் சுற்றுவட்டாரத்தில் மட்டும் சுமார் 200 லாரி பாடி கட்டும் தொழிற்கூடங்கள் உள்ளன. இதனால், நகரில் போக்குவரத்து நெரிசல் மட்டுமின்றி சுற்றுச்சூழலுக்கும் கேடு விளைவிப்பதாக உள்ளது.
பாதிப்புகளை தடுக்கவும், தொழிலை மேம்படுத்தவும், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் லாரி பாடி கட்டும் தொழிற்பேட்டை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டது. இதற்காக தொழில்கூட உரிமையாளர்கள் 300 பேர் ஒன்றிணைந்து நாமக்கல் வேலகவுண்டம்பட்டி அருகே முசிறி கிராமத்தில் ரூ.6 கோடி மதிப்பில் 52.63 ஏக்கர் பரப்பு நிலம் வாங்கப்பட்டு, நாமக்கல் மாவட்ட கனரக வாகனங்கள் கட்டுமான தொழிற்பேட்டை என பெயரிடப்பட்டது.
தொடர்ந்து ரூ.13.68 கோடி மதிப்பில் சாலை, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், ரூ.8.75 கோடி மதிப்பில் 2 மின் மாற்றிகளுடன் புதிய துணை மின் நிலையம் அமைக்கப்பட்டது.
அனைத்துப் பணிகளும் நிறைவு பெற்றபோதும் தொழிற்கூடங்கள் இங்கு இடம் பெறாமல் பழைய இடங்களிலேயே செயல்பட்டு வருகிறது. இதனால், நாமக்கல் மாவட்ட கனரக வாகனங்கள் கட்டுமான தொழிற்பேட்டை அமைந்துள்ள இடம் முட்செடிகள் முளைத்து புதர்மண்டிக் காணப்படுகிறது.
இதுகுறித்து லாரி பாடி கட்டுமான சங்க நிர்வாகிகள் கூறுகையில், தொழிற்பேட்டையில் அரசு வழிகாட்டுதல் மதிப்பீட்டின்படி ஒரு சதுர அடி ரூ.50 ஆகும். எனினும், ரூ. 20 மதிப்பில் இடத்தை பத்திரப் பதிவு செய்து கொடுக்கும்படி மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தியுள்ளோம். இதனை செய்து கொடுத்தால் லாரி பாடி கட்டுமான தொழிற்கூடங்கள் இங்கு உடனடியாக இடமாற்றம் செய்யப்படும், என்றனர்.
இதுகுறித்து மாவட்ட நிர்வாக அதிகாரிகள் கூறுகையில், அரசு வழிகாட்டுதல் மதிப்பை குறைத்து கிரையம் செய்து தரும்படி லாரி பாடி கட்டுமான சங்கத்தினர் வலியுறுத்துகின்றனர். மதிப்பீட்டை எப்படி குறைக்க இயலும். இதுதொடர்பாக குழு அமைத்து அதன் ஆலோசனையின்படி தான் நடவடிக்கை எடுக்க இயலும், என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago