சிங்கம்புணரி அருகே - நிலக்கடலை சாகுபடியில் நூதன முறையை கையாண்டு சாதித்த விவசாயி : ஏக்கருக்கு 1,000 கிலோ மகசூல்

By இ.ஜெகநாதன்

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே விவசாயி ஒருவர் நிலக்கடை சாகுபடியில் நூதன முறையை கையாண்டு ஏக்கருக்கு 1,000 கிலோ மகசூல் எடுத்து சாதித்து காட்டியுள்ளார்.

சிங்கம்புணரி அருகே முசுண்டப்பட்டி ஊராட்சி கானப்பட்டியைச் சேர்ந்த விவசாயி வெள்ளைச்சாமி. இவர் நிலக்கடலை சாகுபடி செய்து வருகிறார். ஏக்கருக்கு 650 கிலோ நிலக்கடலை கிடைத்து வந்தது. மகசூலை அதிகரிக்க முடிவு செய்தார்.

இதற்காக தோட்டக்கலைத் துறை அதிகாரி ஒருவரின் யோசனையின்படி நிலக்கடலை செடிகள் பூ, பூக்கத் தொடங்கியதும் 200 லிட்டர் டிரம்மில் மணல் மூட்டைகளை வைத்து செடியை அமுக்கும் வகையில் உருட்டியுள்ளார். இதனால் செடிகள் நன்கு மண்ணில் அமுங்கி விழுதுகள் அதிகரித்து, மகசூலும் அதிகரித்தது. இதன்மூலம் ஏக்கருக்கு 1,000 கிலோ மகசூல் எடுத்து சாதித்துக் காட்டியுள்ளார்.

இதுகுறித்து விவசாயி வெள்ளைச்சாமி கூறியதாவது: நிலக்கடலை பயிரில் 105 நாட்களில் மகசூல் எடுக்கலாம். இப்பயிரில் செடிகளின் வேர்ப்பகுதியில் விழுதுகள் அதிகரித்தால் தான் மகசூல் அதிகரிக்கும். டிரம்முக்குள் மண் மூட்டைகளை வைத்து உருட்டும்போது செடிகள் மண்ணுக்குள் அமுங்கும். இதனால் விழுதுகள் அதிகரித்து காய்ப்பு அதிகரிக்கும். இது செலவில்லாத எளிய முறை. ஆனால் பலனோ அதிகம். ஏற்கனவே நான் ஒன்றரை ஏக்கரில் இதே முறையில் சாகுபடி செய்தேன். 1,450 கிலோ நிலக்கடலை கிடைத்தது. தற்போது ஒரு ஏக்கரில் சாகுபடி செய்துள்ளேன் என்றார்.

இது குறித்து தோட்டக்கலைத் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, நிலக்கடலை பயிரில் மகசூலை அதிகரிக்க இந்த முறையை நாங்கள் பரிந்துரைத்து வருகிறோம். இதற்கு உருளை உருட்டும் முறை என்று பெயர். இந்த முறையை நிலக்கடலை விவசாயிகள் பலர் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர் என்று கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்