தஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனா 2-வது அலையில் அதிக பாதிப்பு ஏற்பட்டது. இந்த பாதிப்பு கடந்த சில வாரங்களாக அதிகரித்தபடி உள்ளது.
இந்நிலையில், தஞ்சாவூர் மணிமண்டபம், தொல்காப்பியர் சதுக்கம் ஆகிய பகுதிகளில் நேற்று வர்த்தகர்கள், பொதுமக்களிடம் கரோனா விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கி அனைவரும் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவுரை கூறினார்.
அப்போது, சாலைகளில் பேருந்து, ஆட்டோ, லாரி, வேன், இருசக்கர வாகனங்கள், நடந்து செல்பவர்கள் என 50-க்கும் மேற்பட்டவர்கள் முகக்கவசம் அணியாமல் அலட்சியமாக சென்றனர். இதனால், அதிர்ச்சி அடைந்த ஆட்சியர், முகக்கவசம் அணியாமல் சாலையில் சென்றவர்களுக்கு உடனடியாக தலா ரூ.200 அபராதம் விதிக்க உத்தரவிட்டார். தொடர்ந்து தனியார் பேருந்தில் ஏறி ஆய்வு செய்த ஆட்சியர், பேருந்தில் முகக்கவசம் அணியாமல் அமர்ந்திருந்த பயணிகளிடமும் அபராதம் வசூலிக்க உத்தரவிட்டார். இதேபோல, 1 மணிநேரத்தில் முகக் கவசம் அணியாமல் வந்த 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு ஆட்சியர் அபராதம் விதித்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் ஆட்சியர் கூறும்போது, ‘‘தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை முகக்கவசம் அணியாமல் சென்றதாக பொதுமக்களிடமிருந்து ரூ.4 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago