குடியரசுத் தலைவர் வருகையையொட்டி உதகையில் 1,200 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில் ராணுவ அதிகாரிகளுடன் வரும் 4-ம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துரையாடுகிறார். இதற்காக அவர், கோவை சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து நாளை (ஆக.3) ஹெலிகாப்டர் மூலம் உதகை தீட்டுக்கல் பகுதிக்குவருகிறார். அங்கிருந்து ராஜ்பவனுக்கு காரில் செல்லும் அவர், 5-ம் தேதி வரை ஓய்வு எடுத்துவிட்டு, 6-ம் தேதி டெல்லி திரும்புகிறார். பழங்குடியின மக்கள் வசிக்கும் ஒரு கிராமம், ஒரு தேயிலைத் தொழிற்சாலையை குடியரசுத் தலைவர் பார்வையிட உள்ளதால், ஒரு சில கிராமங்களை அதிகாரிகள் தேர்வு செய்துள்ளனர்.
குடியரசுத் தலைவர் வருகையையொட்டி கோவை, ஈரோடு, சேலம், தேனி ஆகிய மாவட்டங்களில் இருந்து 500 போலீஸார், உள்ளூர் போலீஸார் மற்றும் அதிரடிப்படையினர் என மொத்தம் 1,200 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.
விடுதிகளில் சோதனை
உதகை அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் போலீஸாருக்கு பணி ஒதுக்கீடு நேற்று நடந்தது. மாவட்ட எல்லைகளில் சோதனைச் சாவடிகள் மற்றும் முக்கிய இடங்களில் தீவிர வாகன தணிக்கையில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.தங்கும் விடுதிகளில் சந்தேகத்துக்கு இடமான நபர்கள் தங்கி உள்ளார்களா? என்று போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர். உதகை தாவரவியல் பூங்கா சாலையில் இருந்த 25 நடைபாதைக் கடைகள் அகற்றப்பட்டுள்ளன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago