உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தலைமையில் - பெகாசஸ் உளவு விவகாரத்தை விசாரிக்க தனிக் குழு : தமிமுன் அன்சாரி வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

பெகாசஸ் உளவு விவகாரத்தை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தலைமையில் குழு அமைத்து விசாரிக்க வேண்டுமென, மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி தெரிவித்தார்.

மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க நேற்று திருப்பூர் வந்த அவர், செய்தியாளர்களிடம் கூறும்போது, "பெகாசஸ் உளவு விவகாரத்தில், நாட்டிலுள்ள முக்கிய பிரமுகர்களின் அலைபேசி ஒட்டுக்கேட்கப்பட்டுள்ளது.

இவ்விவகாரம் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டு, மத்திய அரசிடமிருந்து முறையான பதில் இல்லாததால், எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து அறவழி போராட்டத்தை நடத்தி வருகின்றன. இதில் பிரதமர் சம்பந்தப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சியினர் கருதுவதால், இப்பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த விவகாரத்தில், உண்மையை அறிய மக்கள் விரும்புகிறார்கள். ஏனென்றால், உளவு பார்க்கப்பட்டிருப்பது மக்கள் பிரதிநிதிகள், நீதிபதிகள்,மனித உரிமை செயல்பாட்டாளர்கள் என சமூகத்தில் முக்கிய இடத்தில் இருப்பவர்கள். உள்நாட்டு சதி இருக்கிறதா, அயல் நாட்டு சதி இருக்கிறதா என மக்கள் அறிய விரும்புகிறார்கள். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள் தலைமையில் ஒரு குழு அமைத்து, விசாரணை நடத்த வேண்டும்.

தமிழகத்துக்கு மிகப்பெரிய நீராதாரமாக இருப்பது காவிரிஆறு. கர்நாடக அரசு மேகேதாட்டுவில் தடுப்பணை கட்ட முயற்சிப்பது, தமிழக மக்கள் மத்தியில் மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

தடுப்பணை கட்டப்பட்டால், தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் விவசாயம் பாதிக்கப்படும். உணவுஉற்பத்திக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். கரோனா தொற்று பாதிப்பு விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாடுகள் எதிர்க்கட்சிகள் பாராட்டும் அளவுக்கு சிறப்பாக உள்ளது. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்