கரோனா பாதிப்பு முடிந்துவிட்டதாக கருத வேண்டாம் : வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற மக்களுக்கு அறிவுரை

By செய்திப்பிரிவு

கரோனா தொற்று பரவல் முடிந்துவிட்டது என பொதுமக்கள் கருதாமல், முகக்கவசம் அணிவது,தடுப்பூசி செலுத்திக்கொள்வது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்ட அரசின்வழிகாட்டு நெறிமுறைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டுமென, திருப்பூர் மாநகராட்சி ஆணையர் கிராந்திகுமார் பாடி அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் கரோனா தொற்று மீண்டும் அதிகரிப்பதை தொடர்ந்து, திருப்பூரில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக, திருப்பூர் தென்னம்பாளையம் சந்தையில் மாநகராட்சிசார்பில் கரோனா உதவி மையம்நேற்று திறக்கப்பட்டது. மாவட்டஆட்சியர் எஸ்.வினீத், மாநகராட்சி ஆணையர் கிராந்தி குமார் பாடி ஆகியோர் திறந்துவைத்தனர்.

இதைத்தொடர்ந்து சந்தையில் பொதுமக்கள் மற்றும் வணிகர்களுக்கு கரோனா குறித்த விழிப்புணர்வு அறிவுரைகளை வழங்கினர். கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தம் செய்ய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டுமென அறிவுறுத்தினர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் மாநகராட்சி ஆணையர் கிராந்திகுமார் பாடி கூறும்போது, "கரோனா தொற்று பரவலை தடுக்க, மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி மற்றும் காவல் துறை இணைந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

தென்னம்பாளையம் சந்தைக்கு நாள்தோறும் அதிகளவில் மக்கள்வருவதால், தேவை கருதி கரோனா உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலமாக பொதுமக்களுக்கு முகக்கவசங்கள் மற்றும் கபசூர குடிநீர் வழங்கப்படும்.

வீட்டை விட்டு வெளியில் வரும் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். கரோனா தொற்று பாதிப்பு முடிந்து விட்டது, ஊரடங்கும் இல்லை என பொதுமக்கள் கருதவேண்டாம்.

தொற்று பாதிப்பு இன்னமும் உள்ளது. எனவே, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும். கடைகள், சந்தைகளில் வியாபாரிகளுக்கும் சில அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

வியாபாரிகள் கூட்டம் கூட்டாமல், திட்டமிட்டு பொருட்களை விற்பனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்றார்.

மாநகராட்சி நல அலுவலர் பிரதீப் வாசுதேவ் கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

கட்டாய பரிசோதனை

இந்நிலையில், தென்னம்பாளையம் சந்தையில் மீன், காய்கறி, இறைச்சி உள்ளிட்டவற்றை வாங்க நேற்று காலை முதலே பொதுமக்கள் திரண்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சந்தை மூடப்பட்டதால், அருகே சாலையோரங்களில் வியாபாரிகள் பொருட்களை விற்பனை செய்தனர்.

மீன் சந்தையிலும் விரைவாக மொத்த விற்பனை நடைபெற்றது. இவற்றுக்கிடையே, தென்னம்பாளையம் சந்தைக்கு முகக்கவசம்அணியாமல் நேற்று வந்தவர்களுக்கு, சந்தை வளாகத்தில் கட்டாய கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்