வீடுகளுக்குள் பாம்புகள் புகுவதை தடுக்கும் வழிகள் : தீயணைப்பு நிலைய அலுவலர் அறிவுரை

By வி.சீனிவாசன்

சேலத்தில் மழை பெய்து வரும் நிலையில், வீடுகளுக்குள் பாம்புகள் புகுந்து வருகிறது. இதை தடுக்கும் வழிகளை சேலம் செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் தெரிவித்துள்ளார்.

சேலத்தில் கடந்த சில நாட்களாக தினமும் மழை பெய்து வருவதால், சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. அதிக மழையால் சில நேரங்களில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து விடுகிறது. மேலும், மழை நீருடன் பாம்பு, தேள், பூராண் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் வீடுகளுக்குள் செல்லும் நிலையுள்ளது. இதனால், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இதனிடையே, சேலம் செவ்வாய்ப்பேட்டை, காவல் நிலையம் அருகில் உள்ள அரசு உயர் நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் அறைக்குள் பாம்பு புகுந்தது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று 6 அடி நீளமுள்ள சாரப் பாம்பை உயிருடன் பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.

இதேபோல, சின்ன திருப்பதி அருகில் உள்ள குடியிருப்பில் கடந்த 26-ம் தேதி வீட்டுக்குள் பாம்பு புகுந்தது. தகவல் அறிந்து அங்கு சென்ற செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் வீட்டில் பதுங்கிய 6 அடி நீள நல்லபாம்பை உயிருடன் பிடித்து வனத்தில் விட்டனர்.

சேலம் மாநகரத்தை ஒட்டியுள்ள கன்னங்குறிச்சி, சின்னதிருப்பதி, நகரமலை அடிவாரம், குரங்குசாவடி, மணியனூர், நெத்திமேடு, சூரமங்கலம், சீலநாயக்கன்பட்டி, கொண்டலாம்பட்டி, உடையாப்பட்டி, சன்னியாசிகுண்டு, எருமாபாளையம் உள்ளிட்ட இடங்களில் மழைக்கு பாம்புகள் வீடுகளுக்குள் புகுந்து வருகிறது.

பாம்புகள் வீடுகளுக்குள் வராமல் தடுப்பது தொடர்பாக சேலம் செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு மீட்பு பணி நிலைய அலுவலர் கலைச்செல்வன் கூறியதாவது:

வீட்டைச் சுற்றி பிளீச்சிங்பவுடர் போடுவதன் மூலம் விஷ ஜந்துக்கள் நடமாட்டத்தை தடுக்க முடியும். அதேபோல, வீட்டு அருகாமையில் தண்ணீர் தேங்காத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும். வீட்டில் இருந்து கழிவு நீர் வெளியேறும் குழாய்களில் வலை போட வேண்டும். வீட்டின் சுற்றுப்பகுதிகளில் தேவையில்லாத பொருட்களை போட்டு வைக்கக் கூடாது. இரவில் வீட்டைச் சுற்றி ஒளி விளக்குகள் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

வீட்டுக்குள் பாம்பு புகுந்து விட்டால் பொதுமக்கள் அதனை அடிப்பது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம். இதனால், பாம்புகள் தப்பிச் செல்ல வாய்ப்புள்ளதால், தொடர் அச்சுறுத்தலுக்கு உள்ளாக நேரிடும். உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்