விருதுநகரில் கவுசிகா நதி புதர் மண்டிக் கிடப்பதோடு கழிவு நீர் ஓடையாக மாறி வருகிறது. நதியை தூய்மைப்படுத்தி தடுப்பணைகள் கட்டி பராமரிக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியில் இருந்து காட்டாறுகளாக வரும் நீர் சேர்ந்து கவுசிகா நதியாக உருவெடுத்து வருகிறது. கவுசிகா நதி வடமலைக் குறிச்சி கண்மாயில் தண்ணீர் நிறைந்த பின்னர், விருதுநகர் வழி யாக குல்லூர்சந்தை நீர்த்தேக்க அணையை சுமார் 21 கி.மீ. தூரம் கடந்து சென்று அடைகிறது.
பரந்து விரிந்த காட்டாறாக இருந்த கவுசிகா நதியில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை எப்போதும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. வெள்ள நீரை தேக்கி வைத்து பயன்படுத்தும் வகையில் விருதுநகருக்குள் வரும் கவுசிகா நதியின் குறுக்கே தடுப்பணையும் கட்டப்பட்டது.
ஆனால் மக்கள் தொகைப் பெருக்கம், ஆக்கிரமிப்பு ஆகிய வற்றால் நதியின் அளவு சுருங்கியது. தடுப்பணைகளும் தடம் இல்லாமல் போயின.
கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் ரூ.6.50 கோடி ஒதுக்கப்பட்டு பெயரளவில் தூர்வாரி கரைகள் உயர்த்தப்பட்டன. தற்போது நதியில் மண்மேடுகள் ஏற்பட்டுள்ளன. நதி முழுவதையும் கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளன.
குடியிருப்புகள், ஹோட்டல்கள், வணிகநிறுவனங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் கலப்பதாலும், குப்பைகள் கொட்டப்படுவதாலும் கவுசிகா நதி கழிவுநீர் வடிகாலாக மாறியுள்ளது.
நதியில் கழிவு நீர் கலப்பதால் விருதுநகரில் ஆத்துமேடு, பாத்திமா நகர், யானைக்குழாய், பர்மா காலனி, அய்யனார் நகர், அகமது நகர் மக்கள் சுகாதாரச் சீர்கேடுகளால் பாதிக்கப்படுகிறார்கள். கொசுத் தொல்லையாலும் பொதுமக்கள் பல்வேறு தொற்று நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
எனவே கவுசிகா நதியை மீண்டும் முறையாக தூர்வாரி சுத்தம் செய்ய வேண்டும். ஆங்காங்கே தடுப்பணைகள் கட்டி நீரை தேக்கினால் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதோடு விருதுநகர் மக்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு நீங்கும் என அப்பகுதி மக்களும், சமத்துவ மக்கள் கட்சியினரும் வலியுறுத்தினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago