தஞ்சாவூர் புறவழிச்சாலை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள - தற்காலிக மீன் சந்தையால் போக்குவரத்து நெரிசல் : ஒதுக்கப்பட்ட இடத்துக்குப் பதிலாக சாலையிலேயே கடைவிரிப்பதால் மக்கள் கடும் அவதி

By செய்திப்பிரிவு

தஞ்சாவூர் புறவழிச்சாலையில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மீன் சந்தையால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், அப்பகுதி மக்களுக்கு தினமும் இடையூறு ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.

தஞ்சாவூர் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கீழவாசலில், மீன் மொத்த மற்றும் சில்லறை வியாபார சந்தை உள்ளது. இங்கு மீன்கள் வாங்க பொதுமக்கள் அதிகளவில் கூடியதால், கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு கீழவாசல் மீன் சந்தை மூடப்பட்டது.

தொடர்ந்து, மீன் மொத்த விற்பனையை தஞ்சை- பட்டுக்கோட்டை புறவழிச்சாலை பகுதிக்கும், சில்லறை விற்பனையை கீழஅலங்கம் பகுதிக்கும் மாவட்ட நிர்வாகம் மாற்றி அமைத்தது. இதில், மொத்த வியாபாரம் செய்வதற்காக புறவழிச்சாலை அருகேயுள்ள இடம் சுத்தம் செய்யப்பட்டு, மின்விளக்கு வசதியும் ஏற்படுத்தித் தரப்பட்டது.

ஆனால், மீன் வியாபாரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வியாபாரம் செய்யாமல், சாலையிலேயே கடைகளை அமைத்து வியாபாரத்தை மேற்கொள்வதால், காலை நேரத்தில் அந்தச் சாலை முழுவதுமாக ஆக்கிரமிக்கப்பட்டு, போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.

அதேபோல, வெளியூரிலிருந்து மீன் ஏற்றி வரும் வாகனங்கள் முதல் நாளே வந்துவிடுவதால், அந்த வாகனங்கள் புறவழிச்சாலையிலேயே நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால், பொதுமக்கள் தினமும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும், விடுமுறை தினங்களில் மீன் வாங்குவதற்காக பொதுமக்கள் அதிகளவில் வந்துசெல்லும் நிலையில், அங்கு சமூக இடைவெளி பின்பற்றப்படுவதில்லை. மீன் வியாபாரிகளும் முகக்கவசம் அணியாமல் வியாபாரத்தில் ஈடுபடுகின்றனர். காலை நேர போக்குவரத்து நெரிசலின்போது, போலீஸாரும் பணியில் ஈடுபடுவதில்லை.

இதுபோன்றவற்றால், புறவழிச்சாலைக்கு மாற்றப்பட்ட மீன் சந்தையால் தினமும் அப்பகுதியில் வசிப்போர் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, இப்பிரச்சினையில் உடனடியாக ஆட்சியர் தலையிட்டு, மீன் வியாபாரத்துக்கு சாலையை பயன்படுத்தாமல், அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தைப் பயன்படுத்தும் வகையில் உத்தரவிட்டு, தொடர்ந்து கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்