நீடாமங்கலம் அருகே நண்பர்கள் 3 பேர் பூச்சிக்கொல்லி மருந்து கலந்த மதுபானத்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றதில், ஒருவர் உயிரிழந்தார். மற்ற இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவாரூர் அருகே கப்பலுடையான் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கார்த்திகேயன் மகன் ஆனந்த்(26), ராஜசேகர் மகன் அசோக்குமார்(26), அண்ணாதுரை மகன் ஆசைத்தம்பி(26). இவர்கள் மூவரும் சிறுவயது முதல் நண்பர்கள். வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த ஆனந்த், அசோக்குமார் ஆகியோர், கரோனா ஊரடங்கின்போது வேலையிழந்து, சொந்த ஊருக்கு திரும்பினர். இதையடுத்து, நண்பர்கள் மூவரும் ஒன்றாக சுற்றித்திரிந்தனர்.
இந்நிலையில், ஆனந்தின் இருசக்கர வாகனம் நேற்று முன்தினம் பள்ளத்தில் விழுந்து சேதமடைந்ததால், அவரது தந்தை கண்டித்துள்ளார். இதனால், மனமுடைந்த ஆனந்த் மதுபானத்தில் பூச்சிக்கொல்லி மருந்தை கலந்து குடித்து தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார். இதையறிந்த அவரது நண்பர்கள் அசோக்குமார், ஆசைத்தம்பி ஆகியோர், தாங்களும் ஆனந்துடன் சேர்ந்து தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தனர்.
இதையடுத்து, 3 பேரும் நேற்று முன்தினம் இரவு வயல்வெளியில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்த மதுபானத்தைக் குடித்துவிட்டு மயங்கிக் கிடந்தனர். வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற அப்பகுதி விவசாயிகள், மயங்கிக் கிடந்த 3 பேரையும் மீட்டு, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை ஆனந்த் உயிரிழந்தார். மற்ற இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நீடாமங்கலம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago