அனைத்து கோயில்களிலும் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு :

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் கரோனா பரவலை தடுக்க கூடுதல் தளர்வுகள் ஏதும் இல்லாமல் ஆகஸ்ட் 9-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆடி மாதத்தை முன்னிட்டு அனைத்து கோயில்களிலும் சிறப்பு வழிபாடு மற்றும் பூஜைகள் நடைபெறும் என்பதால் கரோனா விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என சுகாதாரத்துறை அறிவித்தது.

இதற்கிடையே, வேலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிப்பு நேற்று வெளியிப்பட்டது. அதில், கரோனா பரவலை தடுக்க வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்றும், ஆகஸ்ட் 3-ம் தேதி நடைபெறும் ஆடிப்பெருக்கு திருவிழாவுக்கு பொதுமக்கள் கோயில்களுக்கு வர அனுமதியில்லை என மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இதேபோல, திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ம் தேதி (இன்று) முதல் வரும் 8-ம் தேதி வரை அனைத்து கோயில்கள், நீர்வீழ்ச்சிகள், ஏரிகளை யொட்டியுள்ள கோயில்களில் பக்தர்கள் கூடவும், சுவாமி தரிசனம் செய்ய அனுமதியில்லை என்று மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா நேற்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE