'நீட்' தேர்வை பாஜக ஆதரிக்கிறது, அந்த நிலைப்பாட்டில் இருந்து எப்போதும் நாங்கள் விலகமாட்டோம் என அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கே.டி.ராகவன் தெரிவித்தார்.
வேலூரில் உள்ள தனியார் உணவகம் ஒன்றில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பாஜக மாநில பொதுச் செயலாளரும், வேலூர் மாவட்ட பொறுப்பாளருமான கே.டி.ராகவன் கலந்து கொண்டார். பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘மருத்துவப் படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீதம் இட ஒதுக்கீடும், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளவர்களுக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு இந்த ஆண்டு முதல் அறிவிக்கப் பட்டுள்ளது. இதற்கு, பிரதமர் நரேந்திரமோடிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்த அறிவிப்பால் தமிழக அரசின் 67 சதவீத இட ஒதுக்கீட்டில் எந்த பாதிப்பு வராது. கடந்த7 ஆண்டுகளில் தமிழகத்தில் மட்டும் 11 கல்லூரிகள் தொடங்கப் பட்டுள்ளன. இதை வரவேற்கிறோம். கர்நாடகா அரசு மேகேதாது பகுதியில் அணைக்கட்ட முயற்சி செய்து வருகிறது. இதில், தமிழக அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைக்கும் பாஜக உறு துணையாக இருக்கும்.
‘நீட்' தேர்வை பாஜக ஆதரிக் கிறது. அந்த நிலைப்பாட்டில் இருந்து நாங்கள் எப்போதும் விலகமாட்டோம். பெட்ரோல், டீசல் விலை உயர்வை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத் துள்ளோம்.
அதேநேரத்தில், மாநில அரசு தனது வரியில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்கலாம். பெட்ரோல், டீசல் உற்பத்தி செய்யும் நாடுகளிடம் உற்பத்தியை அதிகரிக்குமாறு மத்திய அரசு வேண்டுகோள் விடுத்து வருகிறது. இதன் மூலம் பெட்ரோல், டீசல் விலை குறைய அதிக வாய்ப்புகள் உள்ளன.
தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத்திறப்பு விழாவில் கலந்து கொள்ள சபாநாயகர் எங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதன்பேரில், படத்திறப்பு விழாவில் பாஜக கலந்து கொள்ளும்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago