வெலிங்டன் முப்படை அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியில், பயிற்சி அதிகாரிகளுடன் ஆகஸ்ட் 4-ம் தேதி குடியரசுத் தலைவர் கலந்துரையாடுகிறார் என மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.
இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 4 நாள் பயணமாக நீலகிரி மாவட்டம் உதகைக்கு வருகிறார். குடியரசுத் தலைவராக பதவியேற்ற பின்னர் அவர் முதல்முறையாக நீலகிரி மாவட்டம் வருகிறார். குடியரசுத் தலைவர் வருகையையொட்டி உதகையில் உள்ள ராஜ்பவன், தாவரவியல் பூங்கா, தீட்டுக்கல் ஹெலிகாப்டர் இறங்கு தளம் ஆகியவை சீரமைக்கப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா கூறியதாவது: குடியரசுத் தலைவர் தனது குடும்பத்தினருடன், 3-ம் தேதி ஹெலிகாப்டர் மூலம் உதகை வருகிறார். ராஜ்பவனில் தங்கும் அவர் 4-ம் தேதி வெலிங்டன் முப்படை அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியில், பயிற்சி பெறும் அதிகாரிகளுடன் கலந்துரையாடுகிறார். இதற்காக அவர், சாலை மார்க்கமாக வெலிங்டன் செல்கிறார்.
இந்த பயணத்தின்போது, ஒரு பழங்குடியினர் கிராமம் மற்றும் தேயிலைத் தொழிற்சாலையை பார்வையிட உள்ளார். 6-ம் தேதி காலை 10.30 மணிக்கு உதகையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கோவை சென்று, அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி திரும்புகிறார். தற்போது கரோனா காலம் என்பதால், குடியரசுத் தலைவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago