மகளிர் காவல் நிலையத்தில் குடும்ப விழா :

பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்து, தீர்வுகண்ட பெண்கள் குடும்பத்தினருடன் பங்கேற்ற குடும்ப விழா நேற்று நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், கடந்த ஓராண்டுக்கும் மேலாக குடும்பப் பிரச்சினைகள் தொடர்பாக பெண்கள் அளித்த புகார்களில், போலீஸார் கொடுத்த கவுன்சிலிங்கால், அப்பெண்கள் கணவருடன் சேர்த்துவைக்கப்பட்டுள்ளனர்.

இப்படி சேர்த்து வைக்கப்பட்ட தம்பதியர் மீண்டும் ஒற்றுமையாக வாழ்கிறார்களா என தெரிந்துகொள்வதற்காக, காவல் நிலையத்தில் நேற்று குடும்ப விழா நடத்தப்பட்டது. இதில் பட்டுக்கோட்டை, திருச்சிறம்பலம், பேராவூரணி, ஒரத்தநாடு பகுதிகளிலிருந்து புகார் அளித்து தீர்வுகண்ட 10-க்கும் மேற்பட்ட தம்பதியர் குழந்தைகளுடன் வந்து, கலந்துகொண்டனர். அவர்களுக்கு ரோஜா, கல்கண்டு, சந்தனம், குங்குமம் கொடுத்து பெண் போலீஸார் வரவேற்றனர்.

தஞ்சாவூர் மாவட்ட சமூக நலத் துறை அலுவலர் ராஜேஸ்வரி, அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் ஏ.ஜெயா, உதவி ஆய்வாளர் லதா ஆகியோர், ‘குடும்ப வாழ்வும், விட்டுக்கொடுத்து வாழ்தலும்' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினர். குடும்ப விழாவில் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்ட பெண்கள், தங்கள் குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் குறித்தும், போலீஸாரின் கவுன்சிலிங்குக்குப் பிறகு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவது குறித்தும் பேசினர்.

இதுகுறித்து போலீஸார் கூறியது: குடும்ப பிரச்சினைகள் தொடர்பாக புகார் அளித்து, சமரசம் செய்துவைக்கப்பட்டவர்களை மீண்டும் வரவழைத்து, தற்போது எப்படி இருக்கின்றனர் என அறிய குடும்ப விழாவாக நடத்தும்படி மத்திய மண்டல ஐ.ஜி பாலகிருஷ்ணன் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, 10 குடும்பத்தினரை வரவழைத்து, அவர்களை ஊக்கப்படுத்தி, குழந்தைகளுக்கு பரிசுப் பொருட்களை வழங்கினோம். மேலும், அவர்களுக்கு மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டு, ஒரு நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்கும்படி செய்தோம்.

இதனால் பொதுமக்களுக்கும், போலீஸாருக்கும் இடையே ஒரு நல்லுறவு ஏற்பட்டுள்ளது என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE