தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டப் பொதுக்குழுக் கூட்டம் திருவாரூரில் நேற்று நடைபெற்றது. மாவட்டத் தலைவர் இரா.முருகேசன் தலைமை வகித்தார். மாநில துணைச் செயலாளர் சி.ஜூலியஸ், மாவட்டப் பொருளாளர் ஆ.சுபாஷ், மாநில செயற்குழு உறுப்பினர் இரா.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் ஆர்.ஈவேரா விளக்கவுரை ஆற்றினார். இதில், சிறப்பு மாநில செயற்குழு உறுப்பினராக திருவாரூர் வட்டாரத் தலைவர் ஐயப்பன் தேர்வு செய்யப்பட்டார்.
கூட்டத்தில் பங்கேற்ற மாநில பொதுச் செயலாளர் ந.ரங்கராஜன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் விரைவில் அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஓய்வு வயது 60 என்பதை குறைக்கக் கூடாது. ஓய்வுபெறுபவர்களுக்கு பணப் பலன்களை ரொக்கமாக வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டம் தொடர வேண்டும். இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு களையப்பட வேண்டும்.
தொடக்க, நடுநிலைப் பள்ளிகளின் நிர்வாகம் மீண்டும் தொடக்கக் கல்வித் துறை என்ற பெயரில் தனி இயக்குநரகமாக செயல்பட அனுமதிக்க வேண்டும். உயர்கல்வி படித்த ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்க வேண்டும். இதற்கான தீர்வுகளை வரும் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago