ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு திறன் குறித்த ‘சீரோ சர்விலன்ஸ்’ ஆய்வில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 70 சதவீதமாக அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் கரோனா தொற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்பு திறன் எவ்வாறு உள்ளது என்பதை கண்டறிய கடந்த மாதம் மூன்றாம் கட்ட ஆய்வு மேற்கொள் ளப்பட்டது. அதன்படி, மாநிலம் முழுவதும் கரோனா தொற்று அதிகம் பாதித்த 888 பகுதிகளில் இருந்து 26,610 பேரிடம் இருந்து ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ‘சீரோ சர்விலன்ஸ்’ என்ற ஆய்வு நடத்தப்பட்டது. இதன் முடிவை பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறை நேற்று வெளியிட்டது.
ராணிப்பேட்டையில் 70%
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 14 பகுதிகளில் 420 பேரிடம் சேகரிக்கப்பட்ட ரத்த மாதிரிகளில் 295 பேருக்கு நோய் எதிர்ப்பு திறன் அதிகரித்திருந்தது. இது 70 சதவீதம் என்பதுடன் மாநில அளவில் 11-வது இடமாகும். திருப்பத்தூர் மாவட்டத்தில் 10 மையங்களில் 300 பேரிடம் சேகரிக்கப்பட்ட ரத்த மாதிரிகளில் 181 பேருக்கு நோய் எதிர்ப்பு திறன் அதிகரித்திருந்தது. இது 60 சதவீதம் என்பதுடன் மாநில அளவில் 27-வது இடமாகும்.வேலூர் மாவட்டத்தில் 22 பகுதி களில் 660 பேரிடம் சேகரிக்கப் பட்ட ரத்த மாதிரிகளில் 444 பேருக்கு நோய் எதிர்ப்பு திறன் அதிகரித்திருந்தது. இது 67 சதவீதம் என்பதுடன் மாநில அளவில் 15-வது இடமாகும்.
தமிழகத்தில் மூன்றாவது அலையை எதிர்கொள்ள தேவை யான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக. பொதுமக்களிடம் கரோனாவுக்கு எதிரான போரில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் பொதுமக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
அதன்படி, வேலூர் மாவட்டத்தில் நேற்றைய நிலவரப்படி 3 லட்சத்து 55 ஆயிரத்து 335 பேர் முதல் டோஸ் தடுப்பூசியும், ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 888 பேர் இரண்டாம் டோஸ் தடுப்பூசியையும் போட்டுக் கொண்டுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 43 ஆயிரத்து 269 பேர் முதல் டோஸ் தடுப்பூசியும், 50 ஆயிரத்து 536 பேர் இரண்டாம் டோஸ் தடுப்பூசியையும் போட்டுக் கொண்டுள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2 லட்சத்து 16 ஆயிரத்து 157 பேர் முதல் டோஸ் தடுப்பூசியும், 37 ஆயிரத்து 531 பேர் இரண்டாம் டோஸ் தடுப்பூசியையும் போட்டுக் கொண்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago