மோகனூரில் கரும்பு பயிருக்கான ஒட்டுண்ணி உற்பத்தி நிலையத்தை முழுஅளவில் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும், என கரும்பு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் ஜேடர்பாளையம், பாண்டமங்கலம், ஓலப்பாளையம், நன்செய் இடையாறு, மோகனூர், காட்டுப்புத்தூர் உள்ளிட்ட இடங்களில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் கரும்பு சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு பாசன ஆதாரமாக பரமத்தி வேலூர், மோகனூர் வழியாக பாய்ந்து செல்லும் காவிரி ஆறு உள்ளது. இந்நிலையில் கரும்பு பயிர்கள் அவ்வப்போது குருத்துப் பூச்சி, இடைக்கணுப் பூச்சி தாக்குதலுக்கு உள்ளாகின்றன.
இதனால் ஏற்படும் இழப்புகளால் விவசாயிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வந்தனர். இதை கருத்தில்கொண்டு மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை வளாகத்தில் ‘ஒட்டுண்ணி உற்பத்தி நிலையம்’ தொடங்கப்பட்டது.
இங்குகுறைந்த விலையில் வழங்கப்படும் ஒட்டுண்ணிகளைப் பெற்றுச் செல்லும் விவசாயிகள், அவற்றை கரும்புத் தோட்டத்தில் விட்டு பயிர்களை பாதுகாத்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஒட்டுண்ணி உற்பத்தி நிலையம் மூடப்பட்டது. இதனால், கரூர் மாவட்டம் புலியூரில் தனியாரிடம் இருந்து அதிக விலை கொடுத்து ஒட்டுண்ணிகளை வாங்கி வரும் நிலை ஏற்பட்டது. இதனால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டு கரும்பு சாகுபடி பரப்பு குறைந்தது.
இதுகுறித்து மோகனூர் பகுதி கரும்பு விவசாயிகள் கூறியதாவது:
மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கடந்த 2010-2011-ம் ஆண்டு இணை மின் உற்பத்திக்கான ஆலை அமைக்கப்பட்டது. அப்போது, ஒட்டுண்ணி உற்பத்தி நிலையம் அகற்றப்பட்டு தனியார் இடத்திற்கு மாற்றப்பட்டது.
பின்னர் அங்கும் மூடப்பட்டது. சமீபத்தில், சர்க்கரை ஆலைக்குச் சொந்தமான இடத்தில் பெயரளவிற்கு ஒட்டுண்ணி மையம் தொடங்கப்பட்டு வெளியில் வாங்கி விற்கப்படுகிறது. விவசாயிகளுக்கு போதுமான அளவு கிடைப்பதில்லை. எனவே, முன்னர் இருந்தது போல இங்கேயே ஒட்டுண்ணி உற்பத்தி செய்து போதுமான அளவுக்கு விவசாயிகளுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.
இதுகுறித்து நாமக்கல் மாவட்ட வேளாண்மைத் துறை இணை இயக்குநர் அசோகன் கூறுகையில், ஒவ்வொரு பயிரையும் பூச்சி தாக்குதலில் இருந்து பாதுகாக்க தனித்தனி ஒட்டுண்ணிகள் உள்ளன. ஊழியர் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களினால் ‘ஒட்டுண்ணி உற்பத்தி நிலையம்’ செயல்படுவதில் தாமதம் ஏற்பட்டது. சமீபத்தில் ஒட்டுண்ணி நிலையம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. தேவைப்படும் விவசாயிகளுக்கு ஒட்டுண்ணி வழங்கப்படுகிறது. ஒட்டுண்ணி பயன்படுத்தும்போது செயற்கை உரங்களின் தேவை ஏற்படாது, என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago