வரதட்சணை கேட்டு மனைவியை கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் சிறைத் தண்டனை :

By செய்திப்பிரிவு

வரதட்சணை கேட்டு மனைவியைக் கொலை செய்த ஹோட்டல் தொழிலாளிக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து திருவாரூர் மகளிர் விரைவு நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே காக்கா கோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால்(51), ஹோட்டல் தொழிலாளி. இவரது மனைவி இந்திரா. கடந்த 2018-ம் ஆண்டு மே 26-ம் தேதி இந்திராவிடம் வரதட்சணை கேட்டு தகராறு செய்த ஜெயபால், அவரை இரும்புக் கம்பியால் தாக்கினார். இதில் படுகாயமடைந்த இந்திரா, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து நன்னிலம் போலீஸார் வழக்கு பதிவு செய்து ஜெயபாலை கைது செய்தனர்.

இதுதொடர்பாக, திருவாரூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கு விசாரணை நிறைவடைந்ததையடுத்து, நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார். இதில், கொலைக் குற்றத்துக்காக ஜெயபாலுக்கு ஆயுள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதம், அபராதத்தை கட்டத் தவறினால் மேலும் 6 மாத சிறைத் தண்டனை, வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததற்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.3,000 அபராதம், அபராதத்தை கட்டத் தவறினால் மேலும் 3 மாத சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

மேலும், சிறைத் தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்