கொள்முதல் நிலையத்தில் 20 நாட்களாக நெல் கொள்முதல் செய்யப்படாததை கண்டித்து - அலிவலத்தில் விவசாயிகள் சாலை மறியல் :

By செய்திப்பிரிவு

பட்டுக்கோட்டை அருகே அலிவலத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கடந்த 20 நாட்களாக நெல் கொள்முதல் செய்யப்படாததைக் கண்டித்து விவசாயிகள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே அலிவலம் அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் அலிவலம், காயாவூர், சீதம்பாள்புரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள், தங்களின் நெல்லை விற்பனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், ஈரப்பதம் மற்றும் நெல்லின் தரத்தைக் காரணம் காட்டி, விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்வதை கடந்த 20 நாட்களாக கொள்முதல் நிலைய அதிகாரிகள் நிறுத்தி வைத்தனர். இதனால், சாலைகளின் இருபுறமும் விவசாயிகள் நெல்லை கொட்டி வைத்து காத்திருக்கின்றனர்.

தற்போது, மாலை நேரங்களில் அவ்வப்போது மழை பெய்து வருவதால், நெல்மணிகள் சேதமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், கொள்முதல் நிலையத்துக்கு பணியாளர்கள் தினமும் வராமல் அவ்வப்போது வந்து செல்வதாகவும் கூறப்படுகிறது.

இதனால் விரக்தியடைந்த விவசாயிகள், 20 நாட்களாக நெல் கொள்முதல் செய்யப்படாததைக் கண்டித்தும், உடனடியாக அனைத்து நெல்லையும் கொள்முதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் பட்டுக்கோட்டை- அறந்தாங்கி சாலையில் நேரடி நெல்கொள்முதல் நிலையம் முன்பு நேற்று மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த பட்டுக்கோட்டை வட்டாட்சியர் தரணிகா மற்றும் போலீஸார் அங்கு சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, உடனடியாக நெல் கொள்முதல் செய்யப்படும் என உறுதியளிக்கப்பட்டதால், சாலை மறியல் கைவிடப்பட்டது.

இதனால், அப்பகுதியில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்