உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை சார்பில், ஒரு முறை பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் மூலம் பயோ டீசல் தயாரிக்கும் திட்டத்தின் தொடக்க விழா திருவண்ணாமலையில் நேற்று காலை நடைபெற்றது.
ஆட்சியர் பா.முருகேஷ் தலைமை வகித்து, திட்டத்தை தொடங்கி வைத்து சிறப்புரை யாற்றினார். அப்போது அவர் பேசும்போது, “ஒரு முறை சமையலுக்கு பயன்படுத்தப்பட்ட எண்ணெயை, மறு சுழற்சி முறையில் பயோ டீசல் தயாரிக்கும் திட்டம், திருவண்ணா மலையில் முதல் முறையாக தொடங்கப்பட்டுள்ளது. ஒரு முறை சமையலுக்கு பயன்படுத்தப்பட்ட எண்ணெய், மீண்டும் பயன் படுத்தப்படுவதால் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன.
உணவகங்கள் உள்ளிட்ட அனைத்து கடைகளில் இருந்து ஒருமுறை பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் பெறப்பட்டு பயோ டீசல் தயாரிக்கப்படும். சமையல் எண்ணெயை உணவுக்காக மீண்டும், மீண்டும் பயன்படுத்தும்போது, உடலுக்கு கேடு விளைவிக்கிறது. இதனால். புற்றுநோய், இதய பாதிப்பு, நெஞ்சு எரிச்சல், உயர் ரத்தழுத்தம், உடல் பருமன், கொழுப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. இந்த திட்டத்தை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கவனமாக கண்காணித்து செயல்படுத்த வேண்டும்” என்றார்.
ஒரு லிட்டர் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் ரூ.26-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு நாளைக்கு 50 லிட்டர் அளவுக்கு மேல் சமையல் எண்ணெய் பயன்படுத்தும் உணவகங்கள், இனிப்பு மற்றும் கார வகைகளை தயாரிக்கும் கடைகள், துரித உணவகங்களில் இருந்து மறு சுழற்சிக்காக பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் பெற திட்ட மிடப்பட்டுள்ளது. இதற்காக, ஒரு தனியார் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதில், கூடுதல் ஆட்சியர் பிரதாப், உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் ராமகிருஷ்ணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago