சிறப்பு டிஜிபி மீதான பாலியல் வழக்கு - 400 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் : 3 ஐபிஎஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை?

By செய்திப்பிரிவு

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு சிறப்பு டிஜிபி பாலியல் தொல்லைகொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில், விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நடுவர் மன்றத்தில் 400 பக்க குற்றப் பத்திரிகையை சிபிசிஐடி போலீஸார் தாக்கல் செய்துள்ளனர்.

சிறப்பு டிஜிபி மற்றும் அவருக்கு உதவிய 3 ஐபிஎஸ் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

எஸ்பியாக உள்ள பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர், கடந்தஏப்ரல் மாதம் அப்போதைய முதல்வரின் பாதுகாப்புப் பணியில் இருந்துள்ளார். மேலதிகாரியான சிறப்பு டிஜிபி தனது மாவட் டத்துக்கு வந்தபோது மரியாதை நிமித்தமாக அவரை எஸ்பி சந்தித்துள்ளார். அப்போது அந்த பெண் எஸ்பியை காரில் ஏறச் சொன்ன சிறப்பு டிஜிபி, பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த விவகாரம் குறித்து அப் போதைய டிஜிபி மற்றும் உள்துறைச் செயலரிடம் அந்தப் பெண் ஐபிஎஸ் அதிகாரி புகார் அளித்தார். இதுகுறித்து விசாரணை நடத்த கூடுதல் தலைமைச் செயலர் அந்தஸ்தில் உள்ள பெண் அலுவலர் தலைமையில் விசாரணை கமிட்டி அமைக்கப் பட்டது.

இதைத் தொடர்ந்து சிறப்பு டிஜிபி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அவர் மீது சிபிசிஐடி போலீஸார் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வழக்கு விழுப்புரம் குற்ற வியல் நடுவர் மன்றத்தில் நடந்து வருகிறது.

இதனிடையே, இவ்வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது, அரசு தரப்பில் ஆஜரானவழக்கறிஞர், ‘‘புகார் குறித்த விசாரணையை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கண்காணித்து வருகிறார். விசாரணையில் ஏற்படும் முன்னேற்றங்கள் குறித்து அறிக்கையும் தாக்கல் செய்து வருகிறோம். மேலும், பெண் எஸ்பி அளித்த புகாரின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாகா கமிட்டியின் அறிக்கையும்அரசிடம் சமர்ப்பித்துள்ளோம்’’ என்று தெரிவித்தார்.

‘‘புகார் மீதான விசாரணை தொடர்பாக தனி நீதிபதி கண்காணித்து வருவதால், மேற்கொண்டு சிபிஐ விசாரணைக்கு அவசியம் இல்லை’’ என கூறி வழக்கை முடித்து வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த உத்தரவு தற்போதைய விசாரணையில் எந்த விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் தெளிவுப்படுத்தினர்.

கடந்த ஏப்ரல் 23-ம் தேதி விழுப்புரம் குற்றவியல் நடுவர் மன்றம் எண் 2-ல், நடுவர் முன்பு பாதிக்கப்பட்ட பெண் ஐபிஎஸ் அதிகாரி ஆஜராகி வாக்குமூலம் அளித்திருந்தார். இந்நிலையில், சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதி தலைமையிலான போலீஸார் விழுப்புரம் தலைமை குற்றவியல்நடுவர் மன்றத்தில் சுமார் 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை நேற்று தாக்கல் செய்துள்ளனர்.

இதனிடையே, பாலியல் புகாரில் சிக்கிய சிறப்பு டிஜிபிக்கு உதவி செய்ததாக 3 ஐபிஎஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தமிழக அரசு கடிதம் அனுப்பி இருப்ப தாக கூறப்படுகிறது.

பாலியல் புகார் குறித்து விசாரணை நடத்த அமைக்கப் பட்ட விசாகா கமிட்டி, 14 சாட்சிகளிடம் விசாரணை நடத்தியது. விசாகா கமிட்டியின் முதல்கட்ட அறிக்கை தமிழக அரசிடம் வழங்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து சிறப்புடிஜிபி மற்றும் அவருக்கு உதவி செய்த ஐஜி, டிஐஜி, எஸ்பி ஆகியோர் மீது துறை ரீதியாக அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இவர்கள் அனைவரும் ஐபிஎஸ் அதிகாரி கள் என்பதால் இவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி கேட்டு தமிழக அரசு கடிதம் அனுப்பி இருப்பதாக கூறப்படுகிறது.

மத்திய உள்துறை அமைச்சக அனுமதி கிடைத்ததும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்