5 கோடி மரக்கன்றுகள் நடவு செய்ய பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் : திருப்பத்தூர் ஆட்சியர் அமர் குஷ்வாஹா வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

திருப்பத்தூர் மாவட்டத்தில் 5 கோடி மரக்கன்றுகளை நடவு செய்ய பொது மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம், ஊரக வளர்ச்சித்துறை சார்பில் குருங்காடுகள் வளர்ப்புத் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தொடங்கி வைத்தார்.

வாணியம்பாடி அடுத்த தும்பேரி ஊராட்சி அண்ணாநகர், ஜோலார்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட மல்லப்பள்ளி ஊராட்சி, அம்மனாங்கோயில் ஊராட் சிக்கு உட்பட்ட காட்டூர்பனந்தோப்பு உள்ளிட்ட கிராமங்களில் மரக் கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தலைமை வகித்து மரக்கன்றுகளை நட்டு வைத்துப் பேசும்போது,‘‘தென்மேற்கு பருவக்காற்று மூலம் நமது மாவட்டத்தில் நல்ல மழையளவு பதிவாகி வருகிறது. இதை பயன்படுத்தி மரக்கன்றுகளை அதிக அளவில் நட வேண்டும். வடகிழக்கு பருவமழை காலத்துக்குள் சுமார் 1 கோடி மரக்கன்றுகளை நடவு செய்ய வேண்டும். அதற்கு, பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்’’ இவ்வாறு அவர் பேசினார்.

இதைத்தொடர்ந்து, வாணியம் பாடி அடுத்த தும்பேரி ஊராட்சியில் ‘விதைப்பறவைகள் இளைஞர் மன்றம்’ சார்பில் 25 ஆயிரம் மரக்கன்றுகள் நடப் பட்டுள்ள பகுதியை ஆட்சியர் நேரில் பார்வையிட்டார்.

அதேபோல, ஜோலார்பேட்டை ஒன்றியம், மல்லப்பள்ளி ஊராட்சி, அம்மனாங்கோயில் ஊராட்சி, காட்டூர்பனந்தோப்பு கிராமத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடும் திட்டத்தை ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், ஜோலார்பேட்டை எம்எல்ஏ தேவராஜ், திட்ட இயக்குநர் மகேஷ்பாபு, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் அருண், வட்டாட்சியர்கள் மோகன் (வாணியம்பாடி) மகாலட்சுமி (நாட்றாம்பள்ளி) பிடிஓ சங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்