நந்தன் கால்வாய் சீரமைப்பு பணிகளை ஆட்சியர் கள ஆய்வு செய்ய வேண்டும் : கால்வாய் பாதுகாப்பு இயக்கத்தினர் ஆட்சியர் அலுவலகத்தில் முறையீடு

By செய்திப்பிரிவு

நந்தன் கால்வாய் திட்ட சீரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்திட வேண்டும் என்று நந்தன் கால்வாய் பாதுகாப்பு இயக்கத்தினர் கோரிக்கை விடுத்து ள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம், கீரனுாரில் தடுப்பணை கட்டி பனமலை ஏரி வரை 37.86 கி.மீ., துாரத்திற்கு நந்தன் கால்வாய் அமைக்கப்பட்டது. இதில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 12.40 கி.மீ.,துாரமும், விழுப்புரம் மாவட்டத்தில் 25.46 கி.மீ., துாரமும் அடங்கும்.

இத்திட்டத்தில் திருவண்ணா மலை மாவட்டத்தில் 14 ஏரிகள், விழுப்புரம் மாவட்டத்தில் 10 ஏரிகள், பனமலை ஏரியில் இருந்து செல்லும் உபரி நீர் மூலம் முட்டத்துார், சங்கீதமங்கலம் வேள்ளேரிப்பட்டு உள்ளிட்ட 12 ஏரிகள் என மொத்தம் 36 ஏரிகள் பயனடையும். திருவண்ணாமலை மாவட்டத்தில் 1,566 ஏக்கர் நிலமும், விழுப்புரம் மாவட்டத்தில் 5,032 ஏக்கர் நிலமும் பாசனம் பெறும்.

இத்திட்டத்தை நிறைவேற்றிய பிறகு பராமரிப்பு மற்றும் மேம்படுத்தும் பணிக்காக 1990-ம்ஆண்டு 22.50 லட்சம் ரூபாயும், 1997ம் ஆண்டு ஒரு கோடியே 9 லட்சம் ரூபாயும், 2001ம் ஆண்டு 15 லட்சம் ரூபாயும் செலவிடப்பட்டது. 2014-2015 நிதியாண்டில் உலக வங்கி நிதி மூலம்14.30 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. ஆனாலும், முழு பயன் கிடைக்கவில்லை. அடுத்து வந்த ஆண்டுகளில் பராமரிப்பின்றி கால்வாய் துார்ந்தது.

இதையடுத்து விழுப்புரம் - திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து நந்தன் கால்வாய் பாதுகாப்பு இயக்கத்தை தொடங்கினர். இவர்களின் முயற்சியால் 2020-ம் ஆண்டு 10 லட்சம் ரூபாய் மதிப்பில் கால்வாய் துார் வாரப்பட்டது.

இதனால் கடந்த ஆண்டு பனமலை ஏரிக்கு தண்ணீர் வரத்து இருந்தது. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என விவசாயிகளும், நந்தன் கால்வாய் பாதுகாப்பு இயக்கத்தினரும் அரசை வலியுறுத்தியதால் ரூ. 40 கோடி மதிப்பில் திட்டம் தயாரிக்கப்பட்டு, அரசு ரூ. 35 கோடி நிதி ஒதுக்கியது. இதில் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு ரூ. 7.5 கோடி, விழுப்புரம் மாவட்டத்திற்கு ரூ.27.50 கோடி ஒதுக்கப் பட்டது.

இந்நிலையில் நந்தன் கால்வாய் பாதுகாப்பு இயக்கத்தினர் நேற்று ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில், “நந்தன் கால்வாயில் அமைக்கப்படும் சிமென்ட் கால்வாய் மிகவும் மெல்லியதாக 65 எம்.எம்., (2.25 இன்ச்) கனத்தில் அமைத்து வருகின்றனர். இப்படி அமைத்தால் சில ஆண்டுகளில் இக்கால்வாய் பழுதடையும். கடந்த 45 ஆண்டுகளாக பலமுறை அரசு சீரமைப்புப் பணிகளை செய்தும் முழுமையான பயன்பாட்டிற்கு வரவில்லை. எனவே ஆட்சியர் நேரடியாக கள ஆய்வு செய்திட வேண்டும். இதுவரை செய்யப்பட்ட பணிகளை தணிக்கை செய்ய வேண்டும். கால்வாய் கன அளவு 65 எம்.எம் என்பதை உயர்த்திட வேண்டும். கால்வாய் கரை முழுவதும் தார் சாலை அமைத்திட வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்