சிபிஐ, சுகாதார அதிகாரிகள் போல நடித்து கைவரிசை - மதுரை, ராமநாதபுரத்தில் மூதாட்டிகளிடம் நகை பறிப்பு :

சிபிஐ, சுகாதார அதிகாரிகள் போல நடித்து, மதுரை, ராமநாதபுரத்தில் 2 மூதாட்டிகளிடம் 14 பவுன் நகைகளை பறித்துச் சென்றவர்களை போலீஸார் தேடுகின்றனர்.

மதுரை தெற்குவாசல் நாடார் வித்தியாசாலை தெருவைச் சேர்ந்தவர் ஷயிலாவதி (70).

இவர் வில்லாபுரத்தில் உள்ள கோயிலுக்குச் சென்று விட்டு, வெளியே தனியாக நின்றார். அப்போது, அங்கு வந்த 2 பேர் தங்களை சிபிஐ அதிகாரிகள் எனக் கூறினர். அந்த மூதாட்டியிடம் வயதான நீங்கள் இவ்வளவு நகைகளை அணிந்து வரலாமா என எச்சரித்துவிட்டு, நகையை வாங்கி பேப்பரில் மடித்துக் கொடுத்து விட்டுச் சென்றனர்.அவர் வீட்டுக்குச் சென்று பார்த்த போது, பொட்டலத்தில் நகையைக் காணவில்லை. இதுதொடர்பாக அவனியாபுரம் போலீஸில் அவர் புகார் செய்தார். போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் காட்டுப் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த நாகலிங்கம் மனைவி அங்கம்மாள் (62). இவர் நேற்று காலை காய்கறி வாங்க அரண்மனை பகுதிக்குச் சென்றார்.அவரிடம் 2 பேர், தங்களை சுகாதார அதிகாரிகள் என அறிமுகப்படுத்திக் கொண்டனர். பின்னர், முகக் கவசம் வழங்கு வதாகக் கூறி அவரை ஒதுக்குப் புறமாக அழைத்துச் சென்றனர்.

பின்னர், அப்பகுதியில் திருடர்கள் அதிகம் நடமாடுவதாகக் கூறி, அவர் அணிந்திருந்த 8 பவுன் நகைகளை வாங்கி பொட்டலமாக மடித்து திருப்பித் தந்துவிட்டு தலைமறைவாயினர்.

மூதாட்டி காய்கறி வாங்கிவிட்டு வீட்டுக்குச் சென்று பார்த்தபோது பொட்டலத்தில் நகைகளை காணவில்லை.

இதுகுறித்து அவர் பஜார் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரோனா ஊரடங்கு தளர்வால் நகர் பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், அதிகாரிகள் போல நடித்து மூதாட்டிகளைக் குறிவைத்து நகை பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவது மக்களை அச்சம் அடைய வைத்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE