திருவண்ணாமலையில் தூய்மைப் பணியை நகராட்சி நிர்வாகமே ஏற்று நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியர் பா.முருகேஷிடம், தூய்மைப் பணியாளர்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.
தி.மலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷிடம், டாக்டர் அம்பேத்கர் நகராட்சி ஒப்பந்தம் மற்றும் நிரந்தர பணியாளர்கள் நலச் சங்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
பின்னர், தலைவர் மலர் வண்ணன், செயலாளர் செல்ல கருங்கன் ஆகியோர் கூறும்போது, “திருவண்ணாமலை நகராட்சியில் சுமார் 260 தூய்மைப் பணியாளர்கள் கடந்த 8 முதல் 25 ஆண்டுகளாக பணியாற்றுகிறோம். கிரீன் வாரியர் என்ற தனியார் நிறுவனத்தின் கீழ் பணி செய்கிறோம். அரசாணைக்கு உட்பட்ட சலுகைகள் வழங்குவது இல்லை. வார விடுமுறை, சீருடை, பாதுகாப்பு உபகரணங்கள், குறித்த தேதியில் ஊதியம், வருங்கால வைப்பு நிதி கணக்குகள் மற்றும் மருத்துவக் காப்பீடு வழங்காமல் உள்ளனர்.
தூய்மைப் பணியாளர்களின் உரிமை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய டாக்டர் அம்பேத்கர் நகராட்சி ஒப்பந்தம் மற்றும் நிரந்தர பணியாளர்கள் நல சங்கத்தை தொடங்கி பதிவு செய்துள்ளோம். பின்னர் சங்கத்தின் மூலமாக, கோரிக்கையை வலியுறுத்தினோம். இதனால் ஆவேசமடைந்த தனியார் நிறுவனத்தினர், எங்களது சங்கத்தை கலைக்க வேண்டும் என கட்டாயப்படுத்துகின்றனர்.
தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றாத கிரீன் வாரியர் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு, நகராட்சி நிர்வாகத்தின் தலைமையில் பணியாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தனியார் நிறுவனத்துக்கு ஆதரவாக செயல்படும் 2 சுகாதார ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்ய வேண்டும்.
மேலும், பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள தூய்மைப் பணியாளர்களை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும். நகராட்சி நிர்வாகமே, தூய்மைப் பணியை ஏற்று நடத்த வேண்டும். அதேபோல் வீதிகளில் இருந்து அகற்றப்பட்ட குப்பைத் தொட்டிகளை மீண்டும் வைக்க வேண்டும். எங்களது கோரிக்கையை ஆட்சியர் நிறைவேற்றி கொடுப்பார் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறோம். இல்லையென்றால், மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் முறையிடுவது என முடிவு செய்துள்ளோம்” என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago