மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் நினைவு தினத்தையொட்டி திருநெல் வேலியில் தாமிரபரணியில் பல்வேறு அரசியல் கட்சியினரும், அமைப்புகளை சேர்ந்தவர்களும் மலரஞ்சலி செலுத்தினர்.
திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றில் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் 17 பேர் உயிரிழந்த நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி காங்கிரஸ் கட்சி சார்பில் அக்கட்சியின் சட்டப் பேரவை கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை எம்எல்ஏ தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. முன்னாள் மத்திய இணை அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், எம்எல்ஏக்கள் ரூபிமனோகரன், பழனி, திருநெல் வேலி மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன், கிழக்கு மாவட்ட தலைவர் கே.பி.கே. ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பாஜக சார்பில் எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், பொதுச்செயலாளர் கணேசமூர்த்தி, புதிய தமிழகம் சார்பில் அதன் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
இதுபோல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காசிவிஸ்வநாதன், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கரிசல் சுரேஷ், தமாகா சார்பில் சுத்தமல்லி முருகேசன், தமிழர் விடுதலை கொற்றம் சார்பில் வியனரசு, பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் தேவேந்திரன், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் துரைப்பாண்டியன், ஆதித்தமிழர் பேரவை சார்பில் கலைக்கண்ணன், இந்து மக்கள் கட்சி சார்பில் உடையார் ஆகியோர் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
பாஜக மாவட்டத் தலைவர் மகாராஜன் தலைமையில் சிலர் அஞ்சலி செலுத்த வந்தனர். ஆனால் ஏற்கெனவே அக் கட்சி சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டு விட்டதாகவும், ஒரு கட்சிக்கு ஒருமுறை மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும் போலீஸார் தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி, அஞ்சலி செலுத்த அனுமதி அளித்தனர். அஞ்சலி நிகழ்ச்சியை முன்னிட்டு திருநெல்வேலியில் கொக்கிரகுளம், சந்திப்பு, வண்ணார்பேட்டை பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கொக்கிர குளம் வழியாகச் செல்லும் வாகனங்களும், பாளையங் கோட்டையிலிருந்து சந்திப்புக்கு செல்லும் வாகனங்களும் மாற்றுப்பாதைகளில் திருப்பி விடப்பட்டன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago