நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரியில் - குழந்தைகளுக்கு நிமோனியா தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம் :

By செய்திப்பிரிவு

திருநெல்வேலியில் ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்படும் தடுப்பூசி அட்டவ ணையில் புதிதாக சேர்க்கப்பட்ட நியுமோகோக்கல் கான்ஜீகேட் எனப்படும் நிமோனியா தடுப்பூசி போடும் பணியை மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் கூறியதாவது:

நியுமோகோக்கல் நிமோனியா என்பது பாக்டீரியாவால் ஏற்படும் ஒருவித தொற்றுநோய். இது குழந்தைகளை பெரும்பாலும் பாதிக்கிறது. இதனால் குழந்தைகளுக்கு சுவாசிப்பதில் சிரமம், காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சுத்திணறல் ஆகியவை ஏற்படுகின்றன. நோய் கடுமையாக இருந்தால் குழந்தைகளின் மரணத்துக்குகூட வழிவகுக்கும். இருமல், தும்மலின்போது வெளிப்படும் துளிகளால் இந்நோய் பரவுகிறது.

இந்தவகை நிமோனியா நோய்களுக்கு எதிராக நல்ல பாதுகாப்பை வழங்கும் புதிய தடுப்பூசி தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இந்த தடுப்பூசி இலவசமாக போடப்படவுள்ளது. 6 வாரங்கள், 14 வாரங்கள் மற்றும் 9-ம் மாதத்தில் ஊக்குவிப்பு தவணையும் வழங்கப்படும்.

அரசு வழங்கிவரும் தடுப்பூசி பட்டியலில் இந்த தடுப்பூசியும் சேர்க்கப்பட்டிருக்கிறது. தனியார் மருத்துவமனைகளில் இந்த தடுப்பூசியின் விலை ரூ.12 ஆயிரம் ஆகும். திருநெல்வேலி மாவட்டத்தில் ஆண்டுக்கு 20,063 குழந்தைகள் இதன்மூலம் பயன்பெறுவார்கள் என்று தெரிவித்தார்.

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் விஷ்ணுசந்திரன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மு. வரதராஜன், மாநகர நல அலுவலர் டாக்டர் மா. சரோஜா, குழந்தைகள் சிறப்பு மருத்துவர் க. வெங்கடேஸ்வரன், பாளையங்கோட்டை உதவி ஆணையர் பிரேம்ஆனந்த், மருத்துவ அலுவலர் தமிழரசி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தென்காசி

தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் குழந்தை களுக்கு நியூமோகாக்கல் கான்ஜீ கேட் தடுப்பூசி செலுத்தும் பணியை மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தரராஜ் தொடங்கி வைத்தார். இத்திட்டம் வாயிலாக தென்காசி மாவட்டத்தில் இந்த ஆண்டு சுமார் 5,004 குழந்தைகள் பயன் பெறுவார்கள். பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுக்கு அட்டவணைப்படி தடுப்பூசியை செலுத்தி பயனடைய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் பழனி, ராஜா, சதன் திருமலைக்குமார், நலப்பணிகள் இணை இயக்குநர் நெடுமாறன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அருணா, அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின், மகப்பேறு மருத்துவர் அனிதாபாலின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் குழந்தைகளுக்கு நிமோனியா தடுப்பூசி போடும் பணியை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் நேற்று தொடங்கி வைத்தார். மாநகராட்சி ஆணையர் சாரு முன்னிலை வகித்தார். சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர்கள் போஸ்கோராஜா, அனிதா, மாநகராட்சி நகர்நல அலுவலர் வித்யா, மாவட்ட தாய்சேய் நல அலுவலர் ஜெசிமேரி, உதவி திட்ட அலுவலர் கன்னியம்மாள், பாத்திமாநகர் நல மைய மருத்துவர் தினேஷ் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டத்தில் 28 மையங்களில் நிமோனியா தடுப்பூசி போடும் பணி நடைபெறுகிறது. மொத்தம் 1,500 குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்