சங்கரன்கோவிலில் ஆடித்தபசுக் காட்சி : பக்தர்கள் பங்கேற்பின்றி நடைபெற்றது

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் ஆடித்தபசு விழா 12 நாட்கள் நடைபெறும். 11-வது நாளில் ஆடித்தபசுக் காட்சி நடைபெறும். இதில் தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம். கடந்த ஆண்டு கரோனா ஊரடங்கால் ஆடித்தபசு விழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு அரசு வழிகாட்டுதலின்படி, பக்தர் கள் பங்கேற்பின்றி ஆடித்தபசு விழா கோயிலுக்குள் நடைபெற்று வருகிறது.

கடந்த 13-ம் தேதி கொடியேற்ற த்துடன் இவ்விழா தொடங்கியது. தினமும் கோயிலில் நடைபெறும் விழா நிகழ்ச்சிகளில் மண்டகப் படிதாரர்கள் 50 பேர் மட்டும் அடையாள அட்டையுடன் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடித்தபசுக் காட்சி நேற்று இரவில் கோயில் தெற்கு உள் பிரகாரத்தில் நடைபெற்றது.

முன்னதாக நேற்று காலையில் சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜை நடைபெற்றது. கோமதி அம்மனுக்கு அழைப்புச் சுருள் வழங்குதல் உள்ளிட்ட வைபவங்கள் நடைபெற்றன.

தொடர்ந்து சுவாமி புறப்பாடாகி கோயில் தெற்கு பிரகாரத்தில் உள்ள தங்கத்தேர் முன்பு எழுந்தருளினார். இதுபோல் கோமதி அம்மன் சந்நிதியில் இருந்து புறப்பாடாகி முதலில் தெற்கு பிரகாரத்தின் மேற்கு பகுதியிலும், பின்னர் மையப்பகுதியிலும் சுவாமிக்கு எதிரே எழுந்தருளினார்.

மாலை 6 மணியளவில் ரிஷப வாகனத்தில் சுவாமி எழுந்தருளி சங்கர நாராயணராகவும், இரவு 9 மணிக்கு யானை வாகனத்தில் எழுந்தருளி சங்கரலிங்க சுவாமி யாகவும் அம்மனுக்கு காட்சி கொடுத்தார். கோயில் ஊழியர்கள், மண்டகப்படிதாரர்கள் மட்டும் விழாவில் பங்கேற்று சுவாமி, அம்மனை தரிசித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE