பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சு.வினீத்திடம் பொதுமக்கள் நேற்று மனு அளித்தனர்.
அனைத்து கட்சியினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், "வீரபாண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.
இங்கு படிக்கும் குழந்தைகளின் பெற்றோர் மிகவும் ஏழ்மையானவர்கள். பிளஸ் 1 சேர்க்கையில், தமிழ் வழி கல்வியில் பயிலக்கூடிய மாணவர்களுக்கு ரூ.ஆயிரத்து 800, ஆங்கில வழி பயிலக்கூடிய மாணவர்களுக்கு ரூ.2 ஆயிரத்து 300 என, தமிழக அரசின் வழிகாட்டும் நெறிமுறைக்கு மாறாக கட்டாய கட்டணம் வசூலிக்க கூடிய நிலை உள்ளது. ஏற்கெனவே, பள்ளியில் இடைநிறுத்தலை தடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இச்சூழலில், இந்த கட்டண வசூல் மாணவர்களை படிக்க முடியாமல் செய்துவிடும். இதை தடுத்து பெற்றோர், மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளனர்.
தேர்தல் பணி வாடகை?
தென்னிந்திய சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் நலச் சங்கத்தினர் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் அளித்த மனுவில், "கடந்த சட்டப்பேரவைத் தேர்தல் பணிக்காக, திருப்பூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் ஒப்பந்த அடிப்படையில் 350-க்கும் மேற்பட்ட சுற்றுலா வாகனங்கள் இயக்கப்பட்டன. தேர்தல் முடிந்து பல மாதங்களாகியும், அந்த வாகனங்களுக்கான வாடகைத் தொகை வழங்கப்படவில்லை.
இதுகுறித்து வட்டாட்சியர் அலுவலகத்திலும், தேர்தல் பிரிவில் கோரிக்கை விடுத்தும் வாடகை கிடைக்கவில்லை. கரோனா பாதிப்பால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறோம். வாகன பராமரிப்பு மற்றும் குடும்ப செலவுக்குகூட பணம் இல்லாமல் இருக்கிறோம். எனவே, தேர்தல் பணிக்கு இயங்கிய ஒப்பந்த வாகனங்களுக்கான வாடகையை வழங்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தனர். கொங்கு மண்டல வியாபாரிகள் சங்க திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் ரமேஷ்குமார் மற்றும் நிர்வாகிகள் அளித்த மனுவில், "ஓராண்டாக பராமரிப்புப் பணி என்ற பெயரில், கொங்கு பிரதான சாலை தோண்டப்பட்டு, தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், இப்பகுதியிலுள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஊரடங்கின் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது, இதுபோன்ற சூழ்நிலையும் கவலையடைய செய்துள்ளது. எனவே, மேற்கண்ட பராமரிப்புப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago