‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்ட மனு மீது நடவடிக்கை - ரூ.2.90 லட்சம் மதிப்பில் ஆழ்துளைக் கிணறு அமைப்பு : கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தகவல்

By செய்திப்பிரிவு

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தில் அளிக்கப்பட்ட மனு மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு காவேரிப்பாட்டணம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டகோட்டப்பட்டி ஊராட்சி புட்டன்கடையில் ரூ.2.90 லட்சம் மதிப்பில் ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டுள்ளது என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் ரூ.60 லட்சம் மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இப்பணிகளை நேற்று ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:

கோட்டப்பட்டி ஊராட்சி புட்டன்கடை கிராமத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்பவர் தங்களது பகுதியில் 50 குடியிருப்புகளுக்கு ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. குடிநீர் பற்றாக்குறை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் மனு அளித்திருந்தார்.

இதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டதன் மூலம், ரூ.2.90 லட்சம் மதிப் பீட்டில் மின்மோட்டாருடன் கூடிய ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 2,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், பண்ணந்தூர் ஊராட்சியில் தென்பெண்ணை ஆற்றில் இருந்து சின்ன ஏரிக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டத்தின் கீழ் 2 கிமீ நீளத்துக்கு ரூ.10 லட்சம் மதிப்பில் சீரமைக்கப்பட்டு, நீர்வரத்து கால்வாய், தடுப்புகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்