குந்தாரப்பள்ளி சந்தை செயல்பட தடை நீட்டிக்கப்பட்டுள்ளதால் பக்ரீத் பண்டிகைக்காக ஆடுகளை விற்பனைக்கு கொண்டுவந்த வியாபாரிகள் தேசிய நெடுஞ்சாலையோரம் நின்று விற்பனை செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி செல்லும் சாலையில் உள்ளது குந்தாரப்பள்ளி கிராமம். இக்கிராமத்தில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் காய்கறி, ஆடுகள், மாடுகள் விற்பனை சந்தை நடைபெறுவது வழக்கம். குறிப்பாக ஆடுகள் மற்றும் மாடுகள் விற்பனை செய்யவும், வாங்கவும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலத்தில் இருந்தும் வியாபாரிகள், கால்நடைகள் வளர்ப்பவர்கள் அதிகளவில் வருவர்.
கடந்த மே மாதம் முதல் கரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் வாரச்சந்தைகளுக்கு அரசு தடை விதித்துள்ளது. இதனால் குந்தாரப்பள்ளி வாரச்சந்தையும் கூடுவதில்லை.
இந்நிலையில் வரும் 21-ம் பக்ரீத் பண்டிகையையொட்டி, குந்தாரப்பள்ளி சந்தைக்கு நேற்று விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். வெளியூர் வியாபாரிகளும் வந்திருந்தனர். சந்தை கூடுவதற்கு தடை உள்ளதால், விவசாயிகள் ஆடுகளை, குந்தாரப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள காலி இடங்களில் விற்பனை செய்தனர்.
இதுதொடர்பாக விவசாயிகள் கூறும்போது, ஒவ்வொரு ஆண்டும் பக்ரீத் பண்டிகைக்காக குந்தாரப்பள்ளி சந்தையில் ரூ.5 கோடிக்கு மேல் கால்நடைகள் விற்பனையாகும். நாங்கள் வளர்க்கும் ஆடுகளுக்கும் நல்ல விலை கிடைக்கும். தற்போது சந்தை நடைபெறாமல் உள்ளதால் ஆடுகளை சாலையோரம் நின்று விற்பனை செய்தோம். சுமார் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகி இருக்கும், என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago