ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்படும் அரிசியில் கருப்பு மற்றும் பழுப்பு அரிசி கலந்திருப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் அனைத்து மண்டல மேலாளர்களுக்கும், அதன் நிர்வாக இயக்குநர் ராஜாராமன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல், நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நவீன அரிசி ஆலைகள் மற்றும் நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் அரைவை முகவர்களாக அங்கீகரிக்கப்பட்ட தனியார் அரைவை ஆலைகளுக்கு அரைவைக்காக அனுப்பப்படுகிறது.
அவ்வாறு அனுப்பப்பட்டு மீண்டும் பெறப்படும் அரிசி, மத்திய அரசால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள பிரிவுகளுக்கு உட்பட்டு இருந்தபோதிலும், அதில் கருப்பு மற்றும் பழுப்பு அரிசி கலந்திருப்பதாக பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளிடம் இருந்து தொடர்ந்து புகார்கள் வருகின்றன.
சில மண்டலங்களில், அரைவை முகவர்கள் தாமாகவே முன்வந்து கலர் சார்ட்டெக்ஸ் (colour sortex) என்ற இயந்திரத்தைப் பொருத்தி கருப்பு மற்றும் பழுப்பு அரிசியை நீக்கம் செய்து வழங்குகின்றனர். அவ்வாறு வழங்கப்படும் அரிசிக்கு பொதுமக்களிடையே எவ்வித புகாரும் இல்லை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
எனவே, இதேபோல கருப்பு மற்றும் பழுப்பு அரிசியை முற்றிலும் நீக்கி, பொதுவிநியோகத் திட்டத்தின்கீழ் ரேஷன் கடைகளில் அனைவருக்கும் வழங்கும் வகையில், அவரவர் மண்டலத்தில் இயங்கி வரும் அனைத்து அரிசி ஆலைகளிலும் அரைவை முகவர்கள் உடனடியாக கலர் சார்ட்டெக்ஸ் இயந்திரத்தை நிறுவி, பொது விநியோகத் திட்டத்துக்கு அரிசி வழங்குவதை உறுதிசெய்து, இதுகுறித்த அறிக்கையை உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும், இனிவரும் காலங்களில் அரைவை ஆலைகளில் கலர் சார்ட்டெக்ஸ் நிறுவியுள்ள அரைவை முகவர்களுக்கு மட்டுமே அரைவைக்காக நெல்லை அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago