பல்லடம் அருகே கார் கவிழ்ந்து 3 பேர் இறந்த விவகாரம் - குடும்பத்தினருக்கு ரூ.2.22 கோடி இழப்பீடு வழங்க காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவு :

By செய்திப்பிரிவு

பல்லடம் அருகே கார் கவிழ்ந்து 3 பொறியாளர்கள் உயிரிழந்த நிலையில், அவர்களது குடும்பத்தினருக்கு ரூ.2 கோடியே 22 லட்சம்இழப்பீட்டை காப்பீட்டு நிறுவனம் வழங்க வேண்டுமென, திருப்பூர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை மாவட்டம் வடவள்ளியை சேர்ந்த மாரியப்பன் (30), விஜயன் (36), பிரதீப் (33),சுதாகர் (28), அன்பழகன் (38) ஆகியோர், அங்குள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் பொறியாளர்களாக பணிபுரிந்து வந்தனர். 2017 அக்டோபர் 13-ம் தேதி கொடைக்கானலுக்கு காரில்சுற்றுலா சென்றனர். 15-ம் தேதி கோவை நோக்கி திரும்பி வந்தபோது, பல்லடம் அருகே கள்ளிப்பாளையத்தில் பிஏபி வாய்க்காலில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், காரை ஓட்டி வந்தமாரியப்பன், விஜயன், பிரதீப், சுதாகர் ஆகியோர் உயிரிழந்தனர். அன்பழகன் மட்டும் உயிர் தப்பினர்.

விபத்தில் உயிரிழந்த கார் உரிமையாளர் மாரியப்பன் தவிர்த்து, 3 பேரின் குடும்பத்துக்கு இழப்பீடு கோரிய வாகன விபத்து வழக்கு, திருப்பூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. காப்பீடு நிறுவனம் சார்பில் மாணிக்கராஜ் ஆஜராகினார். இந்நிலையில் விஜயன் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடியே 97 ஆயிரம், பிரதீப் குடும்பத்தினருக்கு ரூ.80 லட்சம், சுதாகர் குடும்பத்தினருக்கு ரூ.42 லட்சமும் என மொத்தம் ரூ.2 கோடியே 22 லட்சம் இழப்பீடு வழங்க, காரின் காப்பீட்டு நிறுவனத்துக்கு நீதிபதி நாகராஜன் உத்தரவிட்டார். இந்த வழக்கில் மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் ஈ.என்.கந்தசாமி ஆஜரானார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்