திருப்பத்தூர் மாவட்டம் ஆண்டியப்பனூர் ஊராட்சியில் சுமார் 2 ஆயிரம் குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில், ஆண்டியப்பனூர் அணைக்கு செல்லும் வனத்துறைக்கு சொந்தமான சாலையில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) கடந்த 5-ம் தேதி பழுதடைந்தது. இதனால், ஆண்டியப்பனூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு பகுதியில் மின் விநியோகம் தடைபட்டது.
கடந்த 5-ம் தேதி இரவு மின்மாற்றி பழுதடைந் ததால் மின்விநியோகம் பாதிக்கப்பட்ட பகுதியைச் சேர்ந்தவர்கள் 6-ம் தேதி காலை மின்சார வாரிய அலுவலகத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், அங்கு வந்த மின்வாரிய ஊழியர்கள் கடந்த 4 நாட்களாக மின்மாற்றியில் ஏற்பட்ட பழுதை சரிசெய்ய முடியாமல் திணறி வருகின்றனர்.இதனால், அப்பகுதி கடந்த 5 நாட்களாக இருளில் மூழ்கியுள்ளதால், திருப்பத்தூர் மின்பகிர்மான வட்டத்தை கண்டித்து பொதுமக்கள் இன்று (சனிக்கிழமை) மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
இது குறித்து ஆண்டியப்பனூர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தரப்பில் கூறும்போது, ‘‘ஆண்டியப்பனூர் பகுதியில் அமைக்கப்பட்ட மின்மாற்றி கடந்த சில மாதங்களாக அடிக்கடி பழுதடைந்து வந்தது. இதை சரி செய்ய வரும் மின்வாரிய ஊழியர்கள் தற்காலிக தீர்வு மட்டுமே காண்கின்றனர். நிரந்தரமாக பழுதை சரி செய்ய மின்வாரிய ஊழியர்கள் ஆர்வம் காட்டவில்லை.
இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக மழை பெய்துவருவதால் மின்மாற்றி முழுமையாக செயலிழந்து விட்டது. இதனால், கடந்த 5-ம் தேதி இரவு முதல் இன்று (9-ம் தேதி) வரை 5 நாட்களாக மின்சாரம் இல்லாமல் தவித்து வருகிறோம்’’ என்றனர்.
இது தொடர்பாக மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘மின் பராமரிப்புப்பணிகள் நடைபெற்று வருகிறது. ஆண்டியப்பனூர் பகுதியில் விரைவில் மின் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago