விருதுநகர் அரசு மருத்துவமனையில் குழந்தை மாற்றப்பட்டதா? : போலீஸார் விசாரணை

By செய்திப்பிரிவு

விருதுநகர் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தை மாற்றப்பட்டதாக கூறப் படும் புகார் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை மாவட்டம், டி.குன்னத்தூரைச் சேர்ந்தவர் சங்கிலி (38). விறகு வெட்டும் தொழிலாளி. இவரது மனைவி சுப்புலட்சுமி (26). கர்ப்பிணியாக இருந்த சுப்புலட்சுமி, விருதுநகர் அருகே நந்திக்குண்டில் உள்ள தனது தாய் வீட்டுக்கு வந்திருந்தார். நேற்று முன்தினம் மாலை சுப்புலட்சுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சுப்புலட்சுமிக்கு நேற்று காலை அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. அப்போது, காத்திருப்போர் அறையில் இருந்த அவரது தாய் ராமாயியிடம் (55) ஆண் குழந்தை பிறந்ததாக செவிலியர்கள் கூறியதாகக் கூறப்படுகிறது. பிற்பகலில் மருத்துவமனைக்கு வந்த சங்கிலியிடம் இதை ராமாயி கூறியுள்ளார். ஆனால், சற்று நேரத்தில் வந்த செவிலியர்கள் சுப்புலட்சுமிக்கு பெண் குழந்தை பிறந்ததாகவும், கை, கால் விரல்கள் குறைபாட்டுடன் இருப்பதாகத் தெரிவித் துள்ளனர். இதையடுத்து, குழந்தை மாற்றப்பட்டதாக சந்தேகம் இருப்பதாக விருதுநகர் கிழக்கு போலீஸாரிடம் சங்கிலி புகார் தெரிவித்தார். போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து மருத்துவர்களிடம் கேட்டபோது, "காலை 10.55 மணிக்கு அறுவை சிகிச்சை மூலம் ஒரு பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதை செவிலியர்கள் அப்பெண்ணின் உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர். பின்னர், 11.21 மணிக்கு சுப்புலட்சுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆனால், முதலில் ஆண் குழந்தை பிறந்ததாகத் தெரிவித்ததை, சுப்புலட்சுமியின் தாய், தனது மகளுக்குத்தான் ஆண் குழந்தை பிறந்துள்ளது என தவறாக கருதியிருக்க வாய்ப்புள்ளது" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்