குப்பைகளை தரம் பிரித்து வழங்க : பேரூராட்சிகள் உதவி இயக்குநர் அறிவுரை :

By செய்திப்பிரிவு

காவேரிப்பட்டணம் பேரூராட்சியில் தூய்மைப் பணியாளர்களிடம் குப்பைகள் வழங்கும் மக்கள் தரம் பிரித்து வழங்க வேண்டும், என தருமபுரி மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குநர் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் பேரூராட் சியில், தருமபுரி மண்டல உதவி இயக்குநர் கண்ணன் ஆய்வு செய்தார். அப்போது வீடுகளில் குப்பைகள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப் பணியாளர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். அப்போது அவர் கூறியதாவது:

காவேரிப்பட்டணம் பேரூராட் சியில் வசிக்கும் மக்கள், தங்கள் வீடுகளில் குப்பைகளை சேகரிக்க வரும் தூய்மைப் பணியாளர்களிடம், மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்க வேண்டும். மேலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். கரோனா பரவலை தடுக்க பேரூராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. முகக்கவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிக்கப்படுகிறது.

கிருமிநாசினி தெளித்தல், தடுப்பூசி போட்டுக் கொள்ள தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, கடைகளில் பொருட்கள் வாங்கச்செல்லும் மக்கள் கட்டாயம் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். இதனை கடைக்காரர்களும் உறுதி செய்ய வேண்டும்.

சமூக இடைவெளி இல்லாமல் பொருட்கள் விற்பனை செய்வது தெரிந்தால், அக்கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்றார்.

ஆய்வின் போது பேரூராட்சி செயல் அலுவலர் சேம் கிங்ஸ்டன், தலைமை எழுத்தர் கோகிலம், இளநிலை உதவியாளர் இளங்கோ ஆகியோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்