மின் இணைப்பு வழங்க லஞ்சம் வணிக ஆய்வாளர் உட்பட 2 பேர் கைது :

By செய்திப்பிரிவு

சிங்காரப்பேட்டையில் மின் இணைப்பு வழங்க ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய வணிக ஆய்வாளர் உட்பட 2 பேரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த பெரியதள்ளபாடி கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி என்பவரது மகன் தினகரன் (23). விவசாயி. இவர் தனது நிலத்தில் பூந்தோட்டம் அமைத்துள்ளார். தன்னுடைய விவசாய கிணற்றுக்கு மின் இணைப்பு பெறுவதற்காக, சிங்காரப்பேட்டையில் உள்ள உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில், கடந்த மே மாதம் விண்ணப்பம் செய்தார்.

அப்போது அலுவலகத்தில் இருந்த வணிக ஆய்வாளர் பட்டாபிராமன் (37), தினகரனிடம் மின் இணைப்பு கொடுக்க வேண்டுமென்றால் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என கேட்டதாக கூறப்படுகிறது. தன்னால் ரூ-.10 ஆயிரம் கொடுக்க முடியாது என தினகரன் கூறினார். இறுதியாக ரூ.7 ஆயிரம் கொடுத்தால் மின் இணைப்பு கொடுப்பதாக பட்டாபிராமன் தெரிவித்துள்ளார். லஞ்ச பணத்தை கொடுக்க விரும்பாத தினகரன், இதுதொடர்பாக கிருஷ்ணகிரியில் உள்ள லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் புகார் செய்தார்.

இதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் ஆலோசனைப்படி, தினகரன் ரசாயன பொடி தடவப்பட்ட ரூ.7 ஆயிரம் பணத்தை, வணிக ஆய்வாளர் பட்டாபிராமனிடம் கொடுக்க முயன்றார். அப்போது பணத்தை அருகில் உள்ள உதவி வணிக ஆய்வாளர் சதாசிவத்திடம் (42) கொடுக்குமாறு தெரிவித்தார். சதாசிவம் பணத்தை வாங்கியதும், அங்கு மறைந்திருந்த கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி கிருஷ்ணராஜ், இன்ஸ்பெக்டர் சையத் சுல்தான் பாஷா மற்றும் போலீஸார் பிடித்தனர். இதனை தொடர்ந்து வணிக ஆய்வாளர் பட்டாபிராமன், உதவி வணிக ஆய்வாளர் சதாசிவம் ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்