மீன்பிடி தடைக்காலம், கரோனா 2-வது அலை பரவல் ஆகியவற்றின் காரணமாக, கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல் இருந்த நாகை, காரைக்கால், புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் நேற்று 1,200 விசைப்படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க புறப்பட்டுச் சென்றனர்.
மீன்களின் இனப்பெருக்கக் காலத்தை முன்னிட்டு, ஏப்.15 முதல் விதிக்கப்பட்டிருந்த மீன்பிடி தடைக்காலம் ஜூன் 14-ம் தேதி நள்ளிரவுடன் நிறைவடைந்தது. ஆனாலும், கரோனா ஊரடங்கு அமலில் இருந்ததால் மீன்கள் விற்பனை, ஏற்றுமதி, படகுகள் சீரமைப்பு போன்றவற்றில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக நாகை, காரைக்கால், புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் இருந்து வந்தனர்.
அதன்படி, நாகை மாவட்டத்தில் 1,500 விசைப்படகுகள், 5,000 பைபர் படகுகள் மீன்பிடிக்கச் செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதனால், மீன்பிடி மற்றும் மீன்பிடி தொழில் சார்ந்த ஒரு லட்சம் பேர் வேலையிழந்து இருந்தனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் நாகை அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தில் நடைபெற்ற மீனவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் நேற்று முதல் மீன்பிடிக்கச் செல்வது என முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, விசைப்படகு மீனவர்கள் நேற்று அதிகாலை முதலே கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லத் தொடங்கினர். இதுதொடர்பாக மீனவர்கள் கூறியபோது, “இன்று(நேற்று) முதல்கட்டமாக 600 விசைப் படகுகள் கடலுக்குள் சென்றுள்ளன. தொடர்ந்து, அடுத்தடுத்த நாட்களில் மற்ற படகுகளும் செல்லும். 4 நாட்களுக்குப் பிறகு ஒவ்வொரு விசைப்படகாக கரைக்கு திரும்பத் தொடங்கும். அப்போது, மீன்வரத்து அதிகளவில் இருக்கும்” என்றனர்.
இதேபோல, காரைக்கால் மாவட்டத்திலும் நாகை ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவைப் பின்பற்றி, நேற்று மதியம் முதல் விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் செல்லத் தொடங்கினர். அதன்படி, காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திலிருந்து 200 விசைப்படகுகளில் 2 ஆயிரம் மீனவர்கள் நேற்று ஆழ்கடல் மீன்பிடிப்புக்காக புறப்பட்டுச் சென்றனர்.
இதேபோல, புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் ஆகிய 2 விசைப்படகு மீன்பிடி இறங்குதளங்களில் இருந்தும் 400 விசைப்படகுகளில் 2,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று கடலுக்குள் மீன்பிடிக்க புறப்பட்டுச் சென்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago