புதுக்கோட்டையில் 25 ஆண்டு களுக்கு முன்பு கட்டப்பட்ட 2 மாடிகளை கொண்ட வீடு நவீன தொழில்நுட்பத்தைக் கொண்டு 4 அடிக்கு உயர்த்தப்பட்டு வருகிறது.
புதுக்கோட்டையைச் சேர்ந் தவர் செந்தில்குமார். இவர், பெரியார்நகரில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு 2,481 சதுர அடி பரப்பில் 2 மாடிகளுடன் வீடு ஒன்றைக் கட்டினார். தொடர்ந்து பல முறை இப்பகுதியில் போடப்பட்ட சாலையால் வீடு தாழ்வாகியது. மழை காலத்தில் இவரது வீட்டுக்குள்ளும், சுற்றிலும் தண்ணீர் தேங்கி குளம்போல காட்சி அளிக்கும்.
இதனால் தனது வீட்டை நவீன முறையில் உயர்த்த செந்தில்குமார் திட்டமிட்டார். அதன்படி, மதுரையைச் சேர்ந்த பொறியாளர் ஏ.அன்பில் தர்மலிங்கம் மேற்பார்வையில் தரைத்தளத்தில் 250 ஜாக்கிகள் மூலம் வீட்டை 4 அடிக்கு உயர்த்தும் பணி நடைபெற்று வருகிறது.
இப்பணி குறித்து பொறியாளர் அன்பில் தர்மலிங்கம் கூறியது: 2,481 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்தக் கட்டிடத்தின் மொத்த எடை 415 டன். இதை 250 ஜாக்கிகள் உதவியுடன் 4 அடிக்கு உயர்த்த திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் வெளிமாநிலங்களைச் சேர்ந்த 12 பேர் பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது 3 அடி உயர்த்தப்பட்டுள்ளது. அதற்கு ஏற்ப கீழிருந்து சுவர்களும் கட்டப்பட்டு வருகின்றன. அடுத்த வாரம் திட்டமிட்டபடி 4 அடிக்கு உயர்த்திவிடுவோம். உத்தேசமாக இப்பணிக்கு ரூ.4 லட்சம் வரை செலவாகும் என்றார்.
சென்னை, மதுரை, ஈரோடு போன்ற பெருநகரங்களில் இதுபோன்று கட்டிடங்களை இடிக்காமல் நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு உயர்த்தும் பணிகள் இயல்பாக நடைபெறுகின்றன என்றாலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவே முதல் முறையாகும்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago