தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட்டதுடன் நின்றுவிடாமல், அந்தத் தண்ணீரை பெற்றுத் தருவதை காவிரி மேலாண்மை ஆணையம் உறுதிசெய்ய வேண்டும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன், திருவாரூர் மாவட்டம் கோட்டூரில் நேற்று கூறியதாவது:
காவிரி டெல்டா மாவட்டங்களில் 3.5 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்வதற்கான பணிகள் நடைபெறுகின்றன. பல இடங்களில் தண்ணீரின்றி நடவுப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்படுவதால், ஆறுகளில் மட்டும் கடைமடைக்கு தண்ணீர் சென்றிருக்கிறதே தவிர, கிராமங்களில் உள்ள விளைநிலங்களுக்கு தண்ணீர் செல்லாமல் பாலைவனமாக காட்சி அளிக்கின்றன. எனவே, தமிழக அரசு உடனடியாக மேட்டூரில் இருந்து 18 ஆயிரம் கனஅடி தண்ணீரை விடுவிக்க வேண்டும்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் ஜூன், ஜூலை மாதத்துக்கான 40 டிஎம்சி தண்ணீரை தமிழகத்துக்கு கர்நாடகா திறந்துவிட ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் வேலை முடிந்ததாக நினைக்காமல், கர்நாடகாவில் நேரடியாக கண்காணிப்புக் குழு பார்வையிட்டு, தமிழகத்துக்கு உரிய தண்ணீரை பெற்றுத் தருவதை ஆணைய தலைவர் உறுதிசெய்ய வேண்டும்.
ஏனெனில், கடந்த காலங்களில் காலம் கடந்து உபரிநீரை மட்டும் திறந்துவிட்டு, ஆணைய உத்தரவை நிறைவேற்றியதாக கர்நாடகா கணக்கு காட்டியிருக்கிறதே தவிர, உரிய காலத்தில் தண்ணீரை வழங்கியதில்லை. எனவே, ஆணையம் உரிய தண்ணீரைப் பெற்றுக் கொடுத்தால்தான், தமிழகத்தில் குறுவை மற்றும் சம்பா சாகுபடியை மேற்கொள்ள முடியும் என்றார்.
சங்கத்தின் ஒன்றியத் தலைவர்கள் மாங்குடி சரவணன், வரம்பியம் அக்ரி அருள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago