தமிழகத்தை விட்டு கடந்து செல்லும் கரோனா 2-ம் அலை : எந்த மாவட்டத்திலும் 15 சதவீதத்துக்கு மேல் பாதிப்பு இல்லை

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

தமிழகத்தில் எந்த மாவட்டத்திலும் கரோனா தொற்று பாதிப்பு 15 சதவீதத்துக்கு மேல் இல்லை. பெரும்பாலான மாவட்டங்களில் தொற்றின் தீவிரம் குறைந்துள்ள தால் மாநிலத்தை விட்டு கரோனா 2-வது அலை கடந்து செல்கிறது.

தமிழகத்தில் கடந்த மே மாதம் தினமும் 33 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். தற்போது பாதிப்பு 9 ஆயிரமாக குறைந்துள்ளது. தொற்று பாதிப்பில் கோவை மாவட்டம் முதலில் இருந்தது. அடுத்து ஈரோடு, சேலம், சென்னை, திருப்பூர், செங்கல்பட்டு, நாமக்கல், கடலூர் மாவட்டங்கள் இருந்தன. இம்மாவட்டங்களில் தற்போது பாதிப்பு குறைகிறது.முகக்கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகள் தொற்று பரவலைக் குறைத்துள்ளன. மதுரை மாவட்டத்தில் ஆரம்பத்தில் தொற்று பரவல் 1,500 முதல் 1,700 ஆக இருந்தது. தற்போது 164 ஆக குறைந்துள்ளது. தற்போது 2,827 பேர் மட்டும் சிகிச்சை பெறுகின்றனர். மக்களிடையே அச்சம் குறைந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். அதனால், தமிழ கத்தை விட்டு கரோனா 2-வது அலை கடந்து செல்லத் தொடங்கி இருக்கிறது.

இதுகுறித்து சிவகங்கை அரசு மருத்துவமனை பொதுநல மருத்துவர் ஏ.பி. ஃபரூக் அப்துல்லா கூறியதாவது;

இந்த வாரத்தில் மாநிலத்தில் சராசரி கரோனா பாதிப்பு அளவு (கரோனா பாசிட்டிவ் ரேட்) 6.8 சதவீதமாகக் குறைந்துள்ளது. இந்த விகிதம் 20 சதவீதத்துக்கு மேல் எந்த மாவட்டத்திலும் இல்லை. நாகப்பட்டினத்தில் 13.04 சதவீதம், கோவை 12.01%, ராணிபேட்டை 11.99%, நீலகிரி 11.86%, ஈரோடு 11.46 % உள்ளன. மதுரை (1.66 %), காஞ்சி (1.84 %), சென்னை (1.97 %), திருவள்ளூர்(2.52 %), வேலூர் (3.27 %) ஆகிய 5 மாவட்டங்களில் நோய் தீவிரம் வேகமாகக் குறைந்துள்ளது. திருப்பத்தூர் (3.50%), திரு நெல்வேலி (3.57 %), தென்காசி (3.58 %), திண்டுக்கல் (3.65 %), செங்கல்பட்டு (3.81 %), விருதுநகர் (4.85 %) ஆகிய மாவட்டங்களில் சாம்பிள் பாசிட்டிவ் ஐந்துக்குள் குறைந்துள்ளன. ஜூன் இறுதிக்குள் கரோனா 2-ம் அலை மாநிலத்தை விட்டு விலகிச் சென்று விடும் வாய்ப்பு கண்கூடாகத் தெரிகிறது.

கரோனா 3-ம் அலை

ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள 3-வது அலையில் அங்குள்ள மக்கள் அடர்த்தி அடிப்படையில் பார்த்தால், குழந்தைகள் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மக்கள் அடர்த்தி மிகுந்த இந்தியாவில் 3-வது அலை வரும்போது பாதிப்பு அதிகம் ஏற்படும் எனக் கூறப்படுகிறது. பெரியவர்களுக்கான படுக்கை வசதியை தயார்படுத்துவது எளிது. ஆனால், குழந்தைகளுக்கு படுக்கை, மருத்துவ வசதிகளை செய்வதற்கு கூடுதல் நேரம் ஆகும். அதனாலேயே தற்போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த ஆண்டு கரோனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கியது முதல் அந்த வைரஸ் தொடர்பாக தெளிவான விளக்கத்தையும், விழிப்புணர்வையும் மருத்துவர் ஃபரூக் அப்துல்லா சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பதிவிட்டு வருவது குறிப்பிடத் தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்