சிவகங்கை நகராட்சியில் பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்ய சேதப்படுத்திய சாலைகளை சீரமைக்க முடியாததால் பல கோடி ரூபாய் அரசு பணம் வீணாகி உள்ளது.
சிவகங்கை நகராட்சியில் ரூ.31.30 கோடியில் பாதாள சாக்கடைத் திட்டப் பணி நடந்து வருகிறது. இப்பணி 2009-ம் ஆண்டே முடிந்திருக்க வேண்டும். பல்வேறு காரணங்களால் தாமதம் ஏற்பட்டது. மேலும் கடந்த ஆண்டு பாதாள சாக்கடையில் கழிவுநீரை விட்டபோது, பல இடங்களில் அடைப்பு இருந்ததால் கழிவுநீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது.
இதையறிந்த ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி சென்னை மாநகராட்சியில் இருந்து உறிஞ்சும் அதிநவீன இயந்திரத்தை வர வழைத்தார். மேலும் சமீபத்தில் பல கோடி ரூபாய் செலவில் தார்ச் சாலைகளை அமைத்தபோது பல இடங்களில் பாதாள சாக்கடை மேன்ஹோல்களை மூடி விட்டனர்.
இதையடுத்து சாலைகளை உடைத்து மேன்ஹோல்களை திறந்து, இயந்திரம் மூலம் அடைப்புகளை சரி செய்தனர். தற்போது சேதப்படுத்தப்பட்ட சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. ஆனால் சாலைகளை முழுமையாக சீரமைக்க முடியாமல் ஆங்காங்கே சேதப்படுத்திய நிலையிலேயே விடப்பட்டுள்ளன. இதனால் சாலைகளுக்காக செலவிடப்பட்ட பணம் வீணாகி உள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர் கணேசன் என்பவர் கூறியதாவது:
இஷ்டத்துக்கு சாலைகளை அமைத்து மேன் ஹோல்களை மூடி விட்டனர். தற்போது அவற்றை திறக்க சாலைகளை சேதப்படுத்தி உள்ளனர். அதிகாரிகளின் மெத்த னத்தால் அரசு பணம் வீணாகி உள்ளது என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago