நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த ஐந்து நாட்களாக இரவு, பகலாக மழை பெய்து வருகிறது. கடும் குளிரான காலநிலை நிலவுவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மழையுடன் பலத்த காற்றும் வீசுவதால், ஆங்காங்கே மரங்கள் சாய்ந்துள்ளன. இவற்றை தீயணைப்புத் துறையினர் வெட்டி அகற்றி வருகின்றனர். இதுவரை மாவட்டத்தில் பெரியளவில் பாதிப்புகள் ஏதும் பதிவாகவில்லை.
கடந்த சில நாட்களாக முதுமலை, தெப்பக்காடு, மசினகுடி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருவதால், ரம்மியமான காலநிலை நிலவுகிறது. முதுமலைவனங்களில் மழை பெய்து வருவதால், மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீர் வரத்து அதிகரித்து செம்மண்நிறத்தில் மாயாறு காட்சியளிக்கிறது. ஆற்றில் மீன் வளம் குறைந்துள்ளதால், தற்போது மீன்கள் பிடிப்பதை பழங்குடியினர் தவிர்த்து வருகின்றனர். இன்னும் சில மாதங்களில் வடகிழக்கு பருவமழையும் தொடங்க உள்ளதால், வனங்கள் பசுமை குறையாமல் கோடை காலம் வரை நீர் இருப்பு இருக்கும் என பழங்குடியின மக்கள் தெரிவித்தனர். மாயாற்றிலிருந்து செல்லும் நீர் பவானிசாகர் அணையை அடையும். இதனால், பவானிசாகர் அணையின் நீர்மட்டம் உயர்வதுடன், அங்குள்ள பாசன நிலங்கள் பயன்பெறும். கூடலூர் அருகே இருவயல் பகுதியிலுள்ள ஆற்றில் வெள்ளம் அதிகரித்ததால், அப்பகுதியில் வசித்த 5 குடும்பத்தினர் தொரப்பள்ளி பழங்குடியினர் பள்ளியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மழை அளவு (மி.மீ.)
நேற்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் அப்பர்பவானி - 120, எமரால்டு - 111, பந்தலூர் - 93, பாடந்தொரை - 80, செருமுள்ளி - 52, சேரங்கோடு - 54, தேவாலா - 34, மசினகுடி - 33, நடுவட்டம் - 32, கூடலூர் - 24, உதகை - 22.8, ஓவேலி - 18, குந்தா - 15, கிளன்மார்கனில் - 14 மி.மீ. மழை பதிவானது.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago