புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் வசதியை ஏற்படுத்தி சிகிச்சை அளிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கரோனா தொற்றாளர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கரோனா வார்டில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இங்கு, ஏறத்தாழ 450 ஆக்சிஜன் படுக்கைகள் உள்ளன.
இதேபோல, அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் 70 ஆக்சிஜன் படுக்கைகள் உள்ளன.
இவை தவிர, மாவட்டத்தில் ஆலங்குடி, கறம்பக்குடி, கந்தர்வக்கோட்டை, மணமேல்குடி, ஆவுடையார்கோவில், திருமயம், வலையப்பட்டி, விராலிமலை, இலுப்பூர், கீரனூர், சுப்பிரமணியபுரம், அன்னவாசல் போன்ற அரசு மருத்துவமனைகள் உள்ளன.
இங்கும், கரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தலா 50 படுக்கைகள் வீதம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
ஆனால், இங்கு அறிகுறி இல்லாத கரோனா தொற்றாளர்களை மட்டும் தங்க வைப்பதாகவும், மற்ற அனைவரையும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் கூறியது:
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கரோனா தொற்றாளர்களுக்கு தலா 50 படுக்கைகள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அங்கு அறிகுறிகள் அற்றவர்களை மட்டும் தான் தங்க வைக்கின்றனர். மற்ற அனைவரையும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி விடுகின்றனர்.
எனவே, அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், அறிகுறிகள் உள்ள கரோனா தொற்றாளர்களையும் தங்க வைத்து சிகிச்சை அளிப்பதுடன், ஆக்சிஜன் வசதியையும் ஏற்படுத்தி தர வேண்டும் என்றார்.
இது குறித்து மாவட்ட சுகாதார அலுவலர் ஒருவர் கூறியது:
ஆலங்குடி, திருமயம், பொன்னமராவதி, இலுப்பூர் ஆகிய அரசு மருத்துவமனைகளில் சராசரியாக 10 பேர் வீதம் தங்க வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. மற்ற இடங்களில் மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சினைகள் உள்ளன. விரைவில் சரி செய்யப்படும் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago