முழு ஊரடங்கு உத்தரவு காரணமாக கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இருந்து வெளி மாவட்ட தொழிலாளர்கள் பலர் நேற்று சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர்.
திருப்பூர் மாவட்டத்தில் சுமார்10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள், அவற்றை சார்ந்த ஜாப்-ஆர்டர் நிறுவனங்கள் உள்ளன. இவற்றை சார்ந்து உள்ளூர், வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த 9 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். இந்நிலையில், முழு ஊரடங்கு உத்தரவு காரணமாக திருப்பூரில் தங்கி பணிபுரியும் வெளி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள், நேற்று முன்தினம் தொடங்கி சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்ற வண்ணம்உள்ளனர். திருப்பூரில் உள்ள பேருந்து நிலையங்கள், புறநகர் பகுதிகளிலுள்ள பேருந்து நிலையங்களில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளில் நேற்றும் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
ஊரடங்கு நாட்களில் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள், அவற்றை சார்ந்த ஜாப்-ஆர்டர் நிறுவனங்கள் செயல்படும் என திருப்பூர் தொழில் துறையினர் தெரிவித்துள்ளபோதிலும், தொழிலாளர்களில் குறிப்பிட்ட சதவீதத்தினர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர். பேருந்துகள் கிடைக்காத நிலையில், வேன்களில் கூடுதல் கட்டணம் கொடுத்து மதுரை, திருச்சி,தேனி, திண்டுக்கல், கம்பம் உள்ளிட்ட ஊர்களுக்கு பலர் சென்றனர்.
இதேபோல, பேருந்து சேவைகள் நிறுத்தப்படும் என்ற அறிவிப்பு வந்துள்ள நிலையில், ரயில் சேவைகளை நிறுத்துவது குறித்து பெரிய அறிவிப்புகள் வரவில்லை. இருப்பினும், முன்னெச்சரிக்கையாக திருப்பூரில் இருந்து ரயில்கள் மூலமாக நேற்று ஏராளமான வடமாநில தொழிலாளர்களும் சொந்த மாநிலங்களுக்கு புறப்பட்டுச் சென்றனர். இதனால் திருப்பூர் ரயில் நிலையத்தில் நேற்று வடமாநில தொழிலாளர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
கோவையிலிருந்தும் வெளிமாவட்டங்களுக்கு தொழிலாளர்கள் பலர் குடும்பங்களாக பேருந்துகளில் புறப்பட்டுச் சென்றனர். ஆனால், அதற்கேற்ப பேருந்து வசதிகள் இல்லாததால், ஆங்காங்கு தொழிலாளர்கள் அவதிப்பட்டனர். சில இடங்களில் சாலை மறியல் முயற்சிகளிலும் ஈடுபட்டனர்.
ஆம்னி பேருந்துகள் பறிமுதல்
கோவை காந்திபுரம் ஆம்னி பேருந்து நிலையத்தில் இருந்து, முறையான அனுமதி இல்லாமல் இயங்கும் சில பேருந்துகளில் பிஹார், பாட்னா, ஒடிசா ஆகிய இடங்களுக்கு வட மாநில தொழிலாளர்களை ஏற்றிச் செல்ல உள்ளதாக போக்குவரத்து துறையினருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, அங்கு நேற்று மாலை சென்ற போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில் பேருந்துகளுக்கு முறையான ஆவணங்கள் இல்லை என்பதும், பேருந்துகளுக்கு வரி கட்டவில்லை என்பதும் உறுதியானது.
இதுதொடர்பாக போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறும்போது, “தொழிலாளர்களிடம் அதிக கட்டணத்தை பெற்றுக்கொண்டு 4 பேருந்துகளில் எந்த சமூக இடைவெளியும் இல்லாமல் அதிக பயணிகளை ஏற்றிச் செல்லமுற்பட்டனர். இந்த பேருந்துகளுக்கு மொத்தம் ரூ.3 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். இதுபோன்று கடந்த இரண்டு நாட்களில் கோவையின் பல்வேறு பகுதிகளில் மொத்தம் 10 பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. முறையான ஆவணங்களுடன் இயங்கும் மாற்றுப் பேருந்துகளில் தொழிலாளர்கள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றனர்.
இதே போல காங்கயம் பகுதியில் உரிய அனுமதியின்றி வடமாநிலத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற இரண்டு தனியார் பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மோட்டார் வாகன ஆய்வாளர் சத்தியமூர்த்தி கூறும்போது, "இரண்டு பேருந்துகளும் ஆட்சியர்அலுவலகத்தில் ஒப்படைக்கப்படும். பறிமுதல் செய்யப்பட்ட வாகன உரிமையாளர்களுக்கு ஆட்சியர் அபராதம் விதிப்பார்" என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago