கரோனா பரவல் தடுப்பு விதிகளை கடைபிடிப்பதில் அலட்சியம் வேண்டாம் : பொதுமக்களுக்கு தன்னார்வலர்கள் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

கரோனா பரவலை தடுக்க முழு ஊரடங்கின்போது பொதுமக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கரோனா விதிகளை பின்பற்றுவதில் அலட்சியம் காட்ட கூடாது என தருமபுரியைச் சேர்ந்த தன்னார்வலர்கள் வலியுறுத் தியுள்ளனர்.

தருமபுரி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் உடல்கள் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி எதிரில் பச்சையம்மன் கோயில் அருகிலுள்ள மயானத்தில் எரியூட்டப்படுகிறது. இப்பணியில் ஈடுபடும் தன்னார்வலர்கள் சிலர் கூறியதாவது:

கரோனா தொற்றின் 2-ம் அலையில் பாதிப்படைந்து பலர் உயிரிழந்து வருகின்றனர். குறிப்பாக வட மாநிலங்களில் ஒரே நேரத்தில் அதிகமானவர்கள் உயிரிழப்பதால் அவர்களின் உடல்களை எரியூட்டக் கூட இடம் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

மயானத்தில் சடலங்கள் நீண்ட வரிசையில் கிடத்தி வைக்கப்பட்டுள்ளன. இவற்றை எல்லாம் ஊடகங்களில் காணும்போது மனம் பதறுகிறது. இக்காட்சிகள் கரோனா தொற்றின் கோரமுகத்தை காட்டி வருகிறது. ஆனாலும், நம்மில் பலரும் பொது இடங்களில் மிக அலட்சியமாக நடமாடுகின்றனர்.

எங்கேயோ வெளி நாடுகளிலும், வட மாநிலங்களிலும் தானே இவ்வாறு நடக்கிறது. நம் ஊருக் கெல்லாம் இந்த தீவிர பரவல் வராது என்ற அலட்சிய மனநிலையில் பலர் இருப்பதை பார்க்க முடிகிறது.இந்த எண்ணத்தில் தான் பொது இடங்களில் அருகருகே நின்று பேசுவது, முகக் கவசத்தை முகத் தாடை பகுதியில் அணிந்து வலம் வருவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

தருமபுரி மாவட்டத்தில் கரோனா உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தருமபுரி மயானத்தில் இன்று (9-ம் தேதி) கரோனாவால் உயிரிழந்த 3 பேரின் உடல் ஒரே நேரத்தில் எரியூட்டப்பட்டது. கரோனாவால் உயிரிழந்தவர்கள் என்பதால் எரியூட்டும் போது உறவினர்களும் கூட அருகில் வர முடியாத நிலை ஏற்பட்டது.

கரோனா உயிரிழப்பு மேலும் உயர்ந்து விடாமல் இருக்க தொற்றை தடுக்கும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் 100 சதவீதம் பின்பற்றி விழிப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE