தமிழகத்தில் முழு ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வந்ததையொட்டி ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கு தேவை யான பொருட்களை வாங்கவும், சொந்த ஊர்களுக்கு செல்ல நேற்று அதிகமாக கூடியதால் கரோனா பரவல் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. கரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர குறைந்தபட்சம் 2 வாரங்கள் முழு ஊரடங்கு பிறப்பிக்க வேண்டும் என சுகாதாரத்துறையினர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு மே 10-ம் தேதி (இன்று) அதிகாலை 4 மணி முதல் மே 24-ம் தேதி அதிகாலை 4 மணி வரை முழு ஊரடங்கை அமல் படுத்தியுள்ளது.
முழு ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களான காய்கறி, மளிகைப்பொருட்கள், இறைச்சி உள்ளிட்ட கடைகள் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை இயங்கும் என்றும், பால், மருந்தகம், மருத்துவமனைகள், பெட்ரோல் பங்க் ஆகியவை முழுமையாக இயங்கும் என தனது அறிவிப்பில் உறுதிப்படுத்தியது.
மக்களுக்கு தேவையான அத்தியாவசியப்பொருட்கள் தடையின்றி கிடைக்க அரசு ஊரடங்கு காலத்திலும் வழி வகை செய்துள்ளது. அதேநேரத்தில் பொது போக்குவரத்துக்கு அரசு தடைவிதித்தது. மே 10-ம் தேதி முதல் முழு ஊரடங்கு என்பதால் மே 8-ம் தேதி மற்றும் மே 9-ம் தேதிகளில் அனைத்து கடைகளும் திறக்கலாம் என அரசு அறிவித்தது.
இதனால் மகிழ்ச்சியடைந்த ஒருங்கிணைந்த வேலூர் மாவட் டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கரோனா குறித்த அச்சம் இல்லாமல் நகரின் பல பகுதிகளில் கடந்த 2 நாட்களாக வலம் வந்தபடி இருந்ததை காண முடிந்தது.
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் தங்கியுள்ள வெளியூர்களைச் சேர்ந்தவர்கள் 2 வாரங்கள் ஊரடங்கு என்பதால் சொந்த ஊர்களுக்கு செல்ல பெட்டி, படுக்கையுடன் பேருந்து நிலையங்களை நோக்கி படையெடுத்தனர். வெளியூர் செல்லும் பயணிகள் வசதிக்காக அரசு சார்பில் கடந்த 2 நாட்களாக 24 மணி நேரமும் பேருந்துகள் இயக்கப்பட்டன. பேருந்தில் இடம் பிடிக்க முண்டியடித்தபடி ஏறிச்சென்றனர். தனி மனித இடை வெளி, முகக்கவசம் போன்ற அரசின் விதிமுறைகள் காற்றில் பறந்தன.
அதேபோல், கடந்த சில நாட்களாக மூடியிருந்த சலூன்கள் கடைகள் கடந்த 2 நாட்களாக வழக்கம் போல திறக்கப்பட்டன. அதுமட்டுமின்றி ஜவுளி, பேன்சி ஸ்டோர்ஸ், அழகு நிலையங்கள், இரு சக்கர வாகனம் மற்றும் 3 சக்கர வாகனம் பழுது நீக்குவோர், ஹார்டுவேர்ஸ், குளிர்பான விற்பனையகம், பழக்கடைகள், பூக்கடைகள் என அனைத்து கடைகளும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கம்போல் திறக்கப்பட்டன.
இதையறிந்த பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட் களை வாங்க ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள பஜார் மற்றும் மார்க்கெட் பகுதிகளில் கூட்டம், கூட்டமாக குவிந்தனர். காய்கறி, மளிகைக்கடைகள் ஊரடங்கு காலத்திலும் திறந் திருக்கும் என்பதை மறந்த பொது மக்கள் கடந்த 2 நாட்களாக வாரச் சந்தை, உழவர்சந்தை, காய்கறி சந்தைகளில் கட்டுக்கடங்காமல் குவிந்து வீட்டுக்கு தேவையான காய்கறி மற்றும் மளிகை பொருட் களை மொத்தமாக வாங்கிச்சென் றனர். வேலூர் மெயின் பஜார், லாங்கு பஜார், காந்திரோடு, அண்ணா சாலை, ஆரணி ரோடு, காட்பாடி - வேலூர் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் சர்வ சாதாரணமாக சென்று வந்தனர்.
இது ஒரு புறமிருக்க ஊரடங்கு காலத்தில் அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் அடுத்த 14 நாட்களுக்கு தேவையான மதுபாட்டில்களை மதுப்பிரியர்கள் வாங்கி இருப்பு வைக்க சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறப்பதற்குமுன்பே கடை முன்பாக வரிசையில் காத் திருந்தனர் மேலும் பேருந்து நிலையம், ரயில் நிலையம், பஜார் பகுதி, மார்க்கெட், வாரச்சந்தை, உழவர்சந்தை, வணிகநிறுவனங்கள், இறைச்சி விற்பனை நிலையம் என எங்கு பார்த்தாலும் பொதுமக்களின் கூட்டம் கடந்த 2 நாட்களாக பரவலாக காணப்பட்டன. இதன் மூலம் அடுத்த வரும் சில நாட்களில் கரோனா பாதிப்பு மேலும் அதிக ரிக்க வாய்ப்புள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதேநேரத்தில், ஊரடங்கு காலத்தில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடுமையாக பின்பற்றவும், விதிமுறைகளை மீறுவோர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கைகளை எடுத்து கடும் அபராதம் விதிக்க வேண்டும் என உள்ளாட்சி அமைப்பு, ஊரக வளர்ச்சித்துறை, வருவாய் துறை மற்றும் காவல் துறையினருக்கு மாவட்ட ஆட்சியர்கள் நேற்று உத்தரவிட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago